பக்கம்:பாற்கடல்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

லா. ச. ராமாமிருதம்


சித்தப்பா குழந்தைகள் - குளிப்பாட்டல், அவர்கள் உடை மாற்றல் இத்யாதி குழந்தைகளுக்குச் செவிலித் தாய்.

நாங்கள், நானும் என் தம்பியும் வேறு, படித்துக்கொண்டு இருக்கிறோம்.

மகனுக்கு வேளை பொழுது பாராமல், தாக்குதல் வரும் - மகனுக்குச் செவிலித்தாய்.

தவிர சமையல் - இதர, வீட்டுக் காரியங்கள்.

வயது எழுபது.

“மன்னி, வாஸ்தவந்தான். பலகாரத்துக்கு இட்டிலி மல்லிப்பூவா வார்த்திருக்கு. மிளகாய்ப் பொடியிருக்கு. மத்தியானச் சாம்பார் இருக்கு. சட்னி வேறே அரைச்சிருப்பே. இருந்தாலும், தேங்காய் வாங்க வக்கில்லாமல் லால்குடியில் உன் கையால் வெறுமனே பச்சை மிளகாயும் உப்புக்கல்லையும் சேர்த்து இழைச்சு அந்த அம்மிக்கல் சூட்டோடு கொண்டுவந்து இட்லிமேல் தடவுவையே, அதென்னவோ இப்போ ஞாபகம் வந்துடுத்து. இதெல்லாம் அதுக்கு இணையாகுமோ? கறிகாய்க் கூடையில் எலுமிச்சம் பழம் ஒண்ணு பார்த்தேன். இழைச்ச பச்சை மிளகாய் மேல் ஒரு சொட்டுப் பிழிஞ்சு, கடுகையும் தாளிச்சுட்டா. ஹூம்!”

உடனே, மன்னி, மண்ணெண்ணெய் கைவிளக்கு வெளிச்சத்தில் பச்சை மிளகாயும் உப்பும் சேர்த்து இழை இழையென்று இழைத்து, எலுமிச்சம்பழம் பிழிந்து, கடுகு தாளித்துக்கொண்டு வந்து இட்டிலி மேல் இடுவாள்.

“மன்னி, உன்னை நான் பண்ணச் சொன்னேனா? என்னவோ பழைய நாள் கதையைச் சொன்னேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/148&oldid=1534058" இலிருந்து மீள்விக்கப்பட்டது