பக்கம்:பாற்கடல்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

லா. ச. ராமாமிருதம்


மருந்து பிரச்னைகளுக்கு மறதி மருந்தல்ல. என்னைக் கேட்கப் போனால் உண்மையில் மறதி என்பதே கிடையாது. நினைவின் அகண்ட அலமாரியில், ஆலயத்தில், விஷயங்கள், நாளடைவில் தம் தம் இடம் கண்டு தாமே அடங்க சிருஷ்டி தந்திருக்கும் ஒரு வழி. தன்னை ஏமாற்றலுக்கு மறதியை போதையாகப் பயன்படுத்துவது ஒழுங்கல்ல. அதில் பலனுமல்ல.

மன்னி வாழ்க்கைதான் வேத வாழ்க்கை என்று எப்படிச் சொல்வேன்? ஆனால், 'உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக' என்று அவள் வாழ்க்கை அமையவில்லையே! யாருக்குத்தான் அப்படி அமைகிறது என்பதை நாம் எப்போது உணரப் போகிறோம் என்கிற அளவில் மட்டும் அவள் வாழ்க்கை எடுத்துக்காட்டுக்குப் பயன்படட்டுமே!

ராமன், நளன், பஞ்சபாண்டவர்கள், ஹரிச்சந்திரன், பீஷ்மன் இவர்கள் வாழ்க்கையெல்லாம் அவர்களுக்கேற் பட்ட சோதனையால், வீணாகிப் போய்விட்ட வாழ்க்கையா ? ஆனால் இதிலும் சொல்கிறேன், அவரவர் பூத்ததற்குத் தக்கபடி, அவரவர் நினைப் பதற்குத் தக்கபடி, அவர்கள் வாழ்க்கையை ஒரு சவாலாக ஏற்றுக் கொள்வதோ, தன்னைச் சுற்றி வேளைக்கு ஒரு கல்லாகக் கட்டிச் சுவரெழுப்பி, தன்னைக் காற்றும் இல்லாமல் நெருக்கப் போகும் கல்லறையாக நினைப்பதோ.

மன்னிப் பாட்டி என்னத்தை நம்பி வாழ்ந்தாளோ? நான் அவளுக்காகப் பதைபதைக்கும் அளவுக்கு அவள் தன்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தாளோ? படைத்தவனுக்குத்தான் வெளிச்சம். விலக்க முடியாததை அனுபவித்தே தீர வேண்டும் என்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/158&oldid=1534068" இலிருந்து மீள்விக்கப்பட்டது