பக்கம்:பாற்கடல்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



11

"அம்மாப் பெண்ணை நீ உன் பிள்ளைக்குத்தான் பண்ணிக்கொள்ள வேண்டும் !" என்று ஸ்ரீமதி தன் அண்ணனிடம் கை பிடித்துக் கொடுத்துவிட்டுத் தான் போகுமிடம் போய்ச் சேர்ந்துவிட்டாலும், மன்னிப் பாட்டிக்குச் சபலம் விடவில்லை. அம்மாப் பெண்ணைப் பெண் பார்க்க ஓரிருவர் வந்தார்களாம். அவர்களில் ஓரிடம் மெய்யாகவே வசதி உள்ளதுதானாம். இரண்டாந் தாரம். அப்படித்தானே வாய்க்கும் ! கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்றால் முடியுமா? ஆனால் அப்படி ஒன்றும் வயதாகி விடவில்லையாம். ஆள் திடகாத்திரம்தானாம்.

அண்ணாகூட - அதான் என் தந்தை - சொன்னாராம்: "அம்மாப் பெண்ணே, எனக்காக நீ பார்க்காதே! உன் வாழ்க்கை உருப்பட வரும் சமயத்தை நழுவ விடாதே! இந்த வீட்டில் வாழ்க்கைப்பட்டால் - நான் சொல்லத் தேவையில்லை; இந்த வீட்டு நிலைமைதான் உனக்குத் தெரியும்."

தாத்தா: "அம்மாப் பெண்ணே, உன்னிஷ்டம் எப்படியிருந்தாலும் நான் குறுக்கே நிற்கமாட்டேன்."

ஆனால், அம்மாப் பெண், "நான் சப்தரிஷியைத் தான் பண்ணிக்கொள்வேன்!” என ஒரே பிடியாகப் பிடித்து, மன்னியின் கட்டாயத்துக்குக் கண்ணீரானதும், அப்பாவுக்கு - அதான் தாத்தா - பொறுக்கவில்லை. "குழந்தையை அழவிடாதேடி பாவி, இனி அவளை யாரும் பெண் பார்க்க வரக்கூடாது" என்று கட்டளை-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/167&oldid=1534270" இலிருந்து மீள்விக்கப்பட்டது