பக்கம்:பாற்கடல்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

லா. ச. ராமாமிருதம்


நேரத்துக்கு மாமா திரும்பும் வேளைவரை கண்ணில் உசிர்தான்.

சமைக்கும் அரிசியை அளந்து கொடுப்பாராம். எப்படி?

இரண்டு சிறுவர்களையும் இரு கைகளிலும் பிடித்த வண்ணம், இந்தச் சிறுமி அவர்களுக்கு, “இதோ மாமா வந்த உடனே நிமிஷமாகச் சமைச்சுப் போடறேன்!” என்று தாய்க்கு மறு தாயாக ஆறுதல் சொல்லிக் கொண்டு, நல்லதங்காள் மாதிரி நிற்கும் காட்சியை மனத்தில் உருவாக்கிப் பார்த்துக்கொள்கிறேன். வயிறு கொதிக்கிறது.

மனுஷனா இவன்?

நம் குழந்தைகள் இந்தக் கஷ்டப்படுமா? இந்தக் கொடுமை தாங்குமா? கஷ்டமே பட வேண்டாம். இப்படியும் இருந்ததா என்று நினைக்கும் கருணையேனும் அதுகளுக்கு இருக்கிறதோ?

—“உங்கள் பெரியவாள் பட்டாள்னா நாங்களும் படனும்னு எங்கள் தலையெழுத்தா? இல்லை, அது தான் உங்கள் இஷ்டமா ? ஏன், எங்களை விடச் சுகப்பட்டுண்டு இருக்காளே, நினைச்சால் Wrist Watch, நினைச்சால் Organdy, தோளில் அழகாகத் தொங்கற Camera, அவாளைப் பத்தி நினைச்சுப் பாருங்களேன். இந்தப் பெரியவாள் எல்லாம் எங்களைத் தங்களோடு இறுக்கிப் பிடிச்சு வெச்சுக்கப் பண்ணற பயமுறுத்தல் தானே! அவாள் சொல்றதாலே நாங்கள் ஏற்றுக் கொள்கிற மாதிரி ஏதேனும் சாக்ஷி இருக்கா? சரி, அப்படியே இருக்கு, எங்களை அதற்காக என்ன பண்ணச் சொல்கிறீர்கள் ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/176&oldid=1534279" இலிருந்து மீள்விக்கப்பட்டது