பக்கம்:பாற்கடல்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

173


அந்தப் பக்கம் பத்திரிகைகள் விட்டிருந்தேன். அங்கு எனக்கு உறவினரோ, தெரிந்தவர்களோ இவ்வளவு நாட்களுக்குப் பிறகு மிகவும் குறைவு. நெருக்கமான பழக்கங்கூட இல்லை. ஆண்களும் பெண்களுமாக, தெரிந்தவர்கள் அழைப்பில் அழைக்காதவர்களும் ஒட்டிக்கொண்டு, மூட்டையும் முடிச்சுமாய் மூன்று ஜட்காக்களிலிருந்து இறங்கினவர்களை நானே எதிர் பார்க்கவில்லை. இறங்கினதும் இறங்காததுமாக அத்தனைபேரும் அம்மாப்பெண்ணை மொய்த்துக் கொண்டனர். அவர்கள் நடுவில் அம்மா முகத்திலிருந்து ஐம்பது வருடங்களேனும் உதிர்ந்து எல்லோருக்கும் காலத்தின் முன்பின் திரும்பி அவர்கள் பிள்ளைப் பிராயத்தில் நுழைந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்தது எங்களை மறந்து - அதுவே ஒரு தனிக்காட்சி! அட, அந்த வயதில் அம்மா இவ்வளவு அழகா? பிரமித்துப் போனேன். என் தம்பிமார்களே, எழுத ஆசையிருந்தால் மட்டும் போதாது. எழுத்து ஒரு சின்னம்மை, அரிப்பு மாதிரி. அது வராதவர்களே கிடையாது. ஆனால் எத்தனை பேர் குடலிலேயே போட்டுக்கறது, ஜ்வாலையாக வளர்ந்து அவர்களிலும் எத்தனைபேரை எரிக்கிறது, அதிலும் எத்தனைபேரை எரித்துக் கொண்டேயிருக்கிறது என்பதுதான் கேள்வி.

என் தாயார் என்பதற்காகச் சொல்லவில்லை. அந்த நரைக்கூந்தலையும் கண்ணில சதை வளர்ந்துகொண்டிருக்கும் நிலைக்கு அப்பால் பார்க்க உள்கண் பழக வேண்டும். அந்தப் பார்வைக்குக் கண் தனியாகத் திறக்கும் பாக்யம் கிட்ட வேண்டும். இதில் அதிர்ஷ்டம் கால் - அப்பியாசம் முக்கால். இந்த எழுத்தின் வியாபகத்தில் ஸ்தூலப் பொருள்கூட முக்கியம் அல்ல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/179&oldid=1534282" இலிருந்து மீள்விக்கப்பட்டது