பக்கம்:பாற்கடல்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

175


விடுகிறோம். ஆனால் இதில் தனியாக ஒரு களை கட்டிற்று. அல்லது களை கட்டிக்கொண்டது. களை என்பது, விரல் வைத்து விவரிக்க முடியாத அம்சம்.

அழைப்பிதழ் விடுகையிலேயே , உள்ளூரிலேயே, இவர்கள் எங்கே வரப்போகிறார்கள்? என்று நான் நினைத்தவர்கள், இவர்கள் வரவேண்டாம் என்று நான் நினைத்தவர்கள், எல்லாரும் வந்து இருந்து சிறப்பித்தார்கள்.

கூட்டம் நெரிய நெரிய எனக்கு மண்டையில் ஏதோ கிறு கிறு ஏறியது. இதைத் தனிப்பட்ட முறையில் எப்படி விவரிப்பேன்? இருபது வருடங்களுக்கு முன் இப்ப விட வளர்ச்சி குறைந்தவன்தானே ! இப்ப மாத்திரம் என்ன?) ஏதோ ஒரு அசட்டு மதமதப்பு. வழக்கமா சாத்துக்குடிக்குப் பதிலாக எல்லாருக்கும் முகூர்த்தத் தாம்பூலத்தில் தேங்காய் வழங்கும் திமிர். ஆபீஸ் மற்றத் துறைகளிலிருந்து வந்திருக்கும் பெரிய புள்ளிகளின் தலைகள் இது என்னுடைய ராஜசூய யாகம் என்பது போல உணர்வு; இல்லை, இந்தக் காலத்துக்கேற்ப அதேபோல ஏதோ ஒன்று.

அன்றிரவு, கூடத்தில் லால்குடிக் கூட்டம் அம்மாவைப் புடைசூழ, எல்லாரும் என்னென்னவோ ஒருவரையொருவர் இடைமறித்தபடி சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது என்னிடமிருந்து அந்தக் கேள்வி புறப்பட்டது. நான்தான் என் வசத்தில் இல்லையே. மீனாட்சி கல்யாணத்தில் மீனாட்சியம்மனின் போதை!

“ஏன் அம்மா, இத்தனைபேரும் எனக்காகத்தானே வந்திருக்கிறார்கள்?“ - ஏன் கேட்டேன், தெரியாது. கேள்வி ஏன் அப்படி அமைந்தது, தெரியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/181&oldid=1534284" இலிருந்து மீள்விக்கப்பட்டது