பக்கம்:பாற்கடல்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

179


என்ன? கல்யாண சீசன், மாற்றாள் கிடைக்கவில்லை. அந்த அவசரத்துக்கு எவன் அகப்படுவான்? கூட வைத்துக்கொண்டு சமாளிக்க முதல்நாள் இட்டிலிக்கு அரைத்த பாட்டிமார்கள் கூடக் கிடைக்கவில்லை. அவர்களும் எங்கோ தேங்காய் துருவப் போய்விட்டார்களோ?

வந்திருக்கும் பெண்டிரில் யாருக்கும் காரியத்தில் இறங்கத் துணிச்சல் இல்லை. சமையல் முந்நூறுபேருக்கு. ஏதேனும் கொஞ்சம் பிசகினாலும் சிதம்பரமையர் வாயில் யார் புகுந்து புறப்படுவது?

அந்தச் சமயத்துக்கு மன்னிப் பாட்டியும் இருந்ததாகத் தெரியவில்லை. ஒருவேளை கார்த்திகேயனை (கடைக்குட்டி)ப் பிரசவித்திருந்தாளோ என்னவோ? இதெல்லாம் ஹேஷ்ய விஷயம். சீமந்தத்துக்குச் சாமான்கள், காய்கறிகள், பால் தயிர் வாங்கிப் போட்டதும், காணிக்கையாக வந்தவையும், உக்ராண உள்ளிலும், கூடத்திலும் வதியழிகின்றன. கோட்டை அடுப்பு தூங்கறது. சிதம்பரமையரோ கையைப் பிசையும் நிலைமைக்கு வந்துவிட்டார். ஹே லக்ஷமணா!

அப்போ அம்மாப்பெண் - இன்னும் மணமாகவில்லை - வயது பதிமூணோ பதினாலோ - விளையாட்டாகச் சொன்னாளோ, வினையாகச் சொன்னாளோ?

“ஏன் மாமா, நான் சமைக்கட்டுமா ?”

ஐயர்வாள் மருமாளை ஒருமுறை அடையாளம் தெரியாத கண்களுடன் பார்த்தார். அடுத்த அடையாளத்தில், அவர் விழிகள் அகல விரிந்தன. “குட்டி என்னடி சொல்றாள்?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/185&oldid=1534288" இலிருந்து மீள்விக்கப்பட்டது