பக்கம்:பாற்கடல்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

லா. ச. ராமாமிருதம்


அம்மாடி! ராமாமிருதம் சுண்டெலிகூட இல்லை. சுண்டைக்காய், சுண்டைக்காய் கூட இல்லை. சுண்டைக்காய் ஔஷதம். அதன் தகுதி எனக்கில்லை. நான் சுண்டெலியாகவே இருந்துவிடுகிறேன்.

அம்மாவைப் பார்க்கிறேன். இதுவரை அம்மா இதுபற்றி என்னிடம் ஏன் சொன்னதில்லை? சொல்ல வேண்டாம் என்கிற எண்ணமா? சொல்லி என்ன ஆக வேண்டும் என்கிற அலக்ஷியப் பாங்காயிருக்கலாம். இல்லை, அந்த விஷயத்தின் பேரிலேயே அலக்ஷியமாயிருக்கலாம். அதில் என்ன இருக்கிறது? நடந்தது நடந்தாச்சு என்கிற போக்கு. விஷயத்தின் எடை தெரிந்தே அதைத் தூக்கி எறிதல், துறவிச்செருக்கு.

அன்று எல்லோரும் படுத்து ஓசை அடங்கின பின்னர் - ஓசைப்படாமல் எழுந்து அம்மா எங்கு இருக்கிறாள்? பார்க்கிறேன். ரேடியோ எதிரில் Night buib இன் நீல ஒளியில் பிரம்புச் சாய்வு நாற்காலியில், சிந்தனையில் ஆழ்ந்து வீற்றிருக்கும் உருவம் தெரிந்தும் தெரியாததுமாகத் தெரிகிறது. உதட்டின்மேல் இரு விரல்கள். அவளுடைய வழக்கமான போஸ். அவளுக்கும் என்போல் தூக்கமில்லை. ஒரு பாறை போல் தோன்றுகிறாள்.

Legend.

நீல நக்ஷத்ரங்களில் தனித் தனியாகப் பொறிந்து கொண்டு என் மனக்கண்ணில் சொல் எழுகிறது. ஒப்புக்கொள்கிறேன். எனக்கு மிகவும் பிடித்தமான சொல். இதன்மேல் எனக்கு எப்பவுமே பாரபகஷம் உண்டு.

இப்போ மதுரையிலிருந்து திரும்புகையில் தரிசனத்துக்கு லால்குடி போயிருந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/188&oldid=1534291" இலிருந்து மீள்விக்கப்பட்டது