பக்கம்:பாற்கடல்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

183


தேனோ, பன்னீரோ, இளநீரோ ஏதோ ஒரு அபிஷேகத்துக்குப் பின்னர் குருக்கள் உபசார தீபாராதனை காட்டுகிறார். சிவராஜ குருக்களுக்குப் பின் இப்போ அவர் பிள்ளை கணேசன்.

“அம்பாளை நன்னா பார்த்துக்கோங்கோ.”

அவள் எங்கே அப்படி நன்றாகத் தெரிந்துவிடுவாளா? ஏற்கெனவே எனக்குக் கண்ணில் கோளாறு. குன்றிக்கொண்டே வரும் கற்பூர ஒளியில், கர்ப்பக்ருஹத்தின் மையிருளிலிருந்து, உருவம் மங்கலாக அங்குமிங்குமாக (முழுமை காட்டாமல்) பிதுங்குகிறது. கற்பூரம் குளிர்ந்ததும், உருவம் மறுபடியும் இருளோடு கரைந்து விடுகிறது.

தேடின கண்ணுக்குத் தோற்றம்.

மிச்ச நேரத்துக்கு இருளோடு இருள்.

அம்பா, நீ இருக்கிறாயா, இல்லையா?

நீ எது சொல்கிறாயோ, அது. இருக்கிறேன் இல்லை இல்லை, இருக்கிறேன்.

என் நெஞ்சில் அதுசமயம் ஏதேனும் புன்னகை மலர்ந்தமாதிரி எண்ணப் படலம் படர்ந்திடில் அது என் பாக்கியம் அதுவே என் பதிலும்கூட.

Legendஇன் சாயைகளில், கேள்விக்கு பதிலெனப் பிடிபடாத இந்தத் தன்மை ஒன்று, உயிரோடு இருக்கையிலேயே சிலரிடம் இந்த அம்சம் வந்து அடைகின்றது. அம்மா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/189&oldid=1534292" இலிருந்து மீள்விக்கப்பட்டது