பக்கம்:பாற்கடல்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

13


உயிர் வளைய வருகையில் இந்த மனுஷன் ஒரு ஜட வஸ்துவுக்கு ஆஹுதி ஆகவேண்டிய அவசியம் என்ன? அதுபற்றி எழுதிக் காணப்போவதும் பிறர்க்குக் காண்பிக்கப்போவதும் என்ன?

அப்பவும் அவர் உயிர்மேல் தன் ஆர்வத்தை எனக்குப் பழக்கமில்லாத ஒரு கோணத்தின்மூலம் வெளியிடுகிறார் என்று இப்போது அறிகிறேன்.

ஆம். பூ, புஷ்பம், நந்தவனம், பால்கனி, டூயட், ஓடிப்பிடி விளையாட்டு இதிலேயே வாழ்க்கை நிற்குமா?

“வியட்நாம், வேலையில்லாத் திண்டாட்டம், குவாயிட்டில் வேலை, இடி அமீன், யூனியன், பேச்சுரிமை, செயலுரிமை, ஸ்டிரைக், போனஸ், தலைமுறை இடைவெளி, ஜேம்ஸ்பாண்டு, வாட்டர்கேட், சேஸ், ரஜினி ஸ்டைல், டி.வி. எல்லார் வீட்டிலும் நம் வீட்டைத் தவிர” - பிரச்சினைகள், தடங்கள், எடைகள் மாறிக்கொண்டேயிருக்கின்றன. ஆனால் இருந்து கொண்டேயிருக்கின்றன.

தற்சமயம் மார்க்கெட்டில் உச்ச ப்ராக்கெட் எழுத்தாள நண்பன் - நெடுநாளைய நட்பு - அவரைக் கேட்டேன்! “என்னப்பா ஆபீஸ்"க்கும் போய்க்கொண்டு எப்படித் தாக்குப் பிடிக்கிறாய்?"

"உந்தல் இருந்தால் தானே சக்தி வந்துவிடுகிறது. பையன் ‘மாட்டரு‘க்கு காலையில் வாசலில் காத்துக்கிடக்கிறான். எழுந்திருக்க ஏழரை மணி ஆகிவிட்டது. முந்தைய இரவு ஒன்றரை மணி வரை ஒரு தொடர்கதை அத்தியாயம் எழுதி முடித்தேன். பையன் காத்திருப்பது சிறுகதைக்குத்தான். ஒரு மணி நேரத்தில் தட்டிவிடலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/19&oldid=1532908" இலிருந்து மீள்விக்கப்பட்டது