பக்கம்:பாற்கடல்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

193


குருக்கள் வீட்டில், அன்பிலேயே குழைத்து, மோர் கூட இலாது, வெறும் நீரும் சோறும் பிசைந்து, கையிலோ, தாமரை இலையிலோ, இட்ட பழையதிலிருந்து, உத்தியோக ரீதியில் - தனியாக எனக்கு எப்படிக் கட்டுப்படியாகும்? - Hotal Asoka வில் A.C. அறையில், ரொட்டித் துண்டுகள் மிதக்கும் ஸூப்பில் தொடங்கி எண்ணி இருபத்துநான்கு தினுசுகள் வழி, கடைசியாக, சைனா மண் கிண்ணத்தில் பதமான வெந்நீரில் விரல் நுனிகளை நனைத்துக்கொண்டு எழுந்ததும், ஒரு முழுங்கு மட்டுமே கொள்ளும் சின்னஞ் சிறு கோப்பையில் காபியில் முடிந்து - (அப்புறமும் ஏதோ ஒரு தினுசில் திருப்தியில்லாத) Dinner வரை சாப்பிட்டிருக்கிறேன்.

ஆனால் இந்தத் தகவலில் பெருமையும் இல்லை. இது தகவலும் இல்லை. நான் வெறும் உண்டி வளர்ப்பான் என்கிற எண்ணத்துக்கே, இந்த விவரங்கள் இடம் தர ஏதுவாக இருக்கின்றன. அதனாலேயே இதில் Vulgarity தட்டுகிறதோ என்றுகூட பயமாயிருக்கிறது. ஆனால் என் நினைப்பு அது அல்ல. இந்தத் தப்புக்கு உடனே பிராயச்சித்தம் தேடுவதும் அவசியமாகி விட்டது.

1967-இல் அதிகாரிகள் ஏதோ ஒரு பயிற்சி பெற (Training) டில்லிக்கு அனுப்பினார்கள். மொத்தம் ஆறு வாரப் பயிற்சி. அதுவரை எனக்கு அவ்வளவு நீண்ட பயணம் நேர்ந்ததில்லை. கேட்கப்புகின், குறுகிய பயணங்களுக்குக் கூட அகக் கண்ணில் மங்க ஆரம்பித்து விட்டதோ என்னவோ? அவளே பொழுதில் பாதிக்கு மேல். நினைவில் அதற்கும் மேல். இருளில்தானே இழைந்து கிடக்கிறாள்! இந்த நிலைக்கு அணை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/199&oldid=1534302" இலிருந்து மீள்விக்கப்பட்டது