பக்கம்:பாற்கடல்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

லா. ச. ராமாமிருதம்

கோலியே, என் பாட்டனார், அவருடைய கவித்துவத்தில் ஓரிடத்தில் அவளைத் தோத்தரிக்கிறார்.

“பேணேம் ஆனாலும், முதிர் அன்பால்
வம்சமுறையே எதிரும் கருணாநிதியே”

(உன்னை நாங்கள் வழிபடாவிட்டாலும், உன்னுடைய முதிர்ந்த அன்பில் வம்சவழியில் எங்களுக்குத் துணை நிற்கும் (அல்லது தோன்றிக் கொண்டிருக்கும்) கருணாநிதியே!)

(பெருந்திருப் பாட்டி! நாங்கள் பேரன்மார்கள், சிறிசுகள். இப்படித்தான் இருப்போம். நாங்கள் மறந்தாலும், நீ எங்களை மறக்காதே என்பதுதான் தாத்பரியம். இதில் வேடிக்கை, அவளும் அப்பத்தான்!)

டெல்லிக்குப் புறப்படுகையில் எனக்கு வயது ஐம்பது தாண்டிவிட்டது. டெல்லி சேர்ந்ததும் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரியிருந்தது. கலம் அழுக்கு ஏறியிருந்தாலும் Pant-இலோ, பைஜாமாவிலோ படுத்துறங்கும் வடநாட்டாருக்கு வேட்டியைக் கண்டால் எளப்பம். இல்லை - நான் போன சமயம் அப்படி 'ஸாதி வாலா’ என்று கேலி பண்ணுவார்கள். பாஷை தெரியாது. ஆங்கிலம் தெரிந்தவன்கூட வீம்புக்குத் தன் பாஷைதான் பேசவான். அவர்களுடைய தேசப்பற்று சில விஷயங்களில் அப்படி, வகுப்பின் சூழ்நிலையிலேயே ஆதரவு இல்லை. உள்பகையும் அவநம்பிக்கையும் தான் உணர முடிந்தது. முதல் தினத்திலிருந்தே, சென்னை திரும்ப இன்னும் எத்தனை நாள் என்று குழந்தை மாதிரி எண்ண ஆரம்பித்தவிட்டேன்.

ஆனால் நல்ல வேளை; இந்நிலையினின்று மீட்சிக்கு விடிவும் கண்டது. கடைசிவரை துணையும் இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/200&oldid=1534303" இலிருந்து மீள்விக்கப்பட்டது