பக்கம்:பாற்கடல்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

197


கோயில் தெரு 21-Cயில் என் குடும்பத்துடன் என்னைச் சேர்ப்பித்த இந்த அம்மாளின் மந்திரக்கோலை என்ன என்பேன் ? இதுபோல் என் எழுத்துமூலம், நான் கண்டும் காணாமலும் தாய்மார்கள் எத்தனைபேர் ஆங்காங்கே சிதறியிருக்கிறார்களோ ? தனித்தனியாக என் நன்றியை அவர்களிடம் எவ்வாறு தெரிவித்துக் கொள்வேன்? அனைவருக்கும் என் நமஸ்காரத்தைத் தான் சொல்லிக்கொள்ள முடியும்.

தருணம் நேர்ந்துவிடுகிறது. அந்தச் சமயத்தின் பரவசத்துடன் அதன் பாதிப்பு நிற்கவில்லை. சிந்தனையில் ஊறி, மோனத்தில் உருவேறி, வேளை வரும்போது மோனத்தின் வாக்காக எழுத்தில் வெளிப்படுகையில் கூடவே அதன் பரிவாரமென…

நெஞ்சில் அமைதி தவழ்விக்கும் கண்ணுக்குக் காணா வெண்புறாக்களும்,

நெஞ்சில் ரஹஸ்யப் பாளம் எதையோ கீறிக் கவிதை சொரிய வைக்கும் கண்ணுக்குத் தெரியா க்ரவுஞ்சங்களும் விடுபடுகின்றன. உள்ளே சுற்றிச் சுற்றி வட்டமிடுகின்றன.

பாற்கடலைக் கடைகையில் தோன்றிய குமிழிகள் தாம் இவையென்றாலும் உள்ளே அமுதத் துளிகள் தங்கியிருப்பதால் இந்தக் குமிழிகளும் அமரத்துவம் அடைந்து விட்டன. உன் வாழ்க்கையின் இருள் நேரங்களுக்கு இந்தக் குமிழிகள்தாம் வெளிச்சங்கள் என்று ஏதோ தைரியம் சொல்கிறது. ஆறுதல் அடைகிறோம்.

இந்த இடைமறிப்பு இப்போதைக்கு இத்துடன் நிற்கட்டும். அம்ருத மந்தனத்தில் இதுபோன்ற தோற்றுவாய்கள் இன்னும் எத்தனை எத்தனையோ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/203&oldid=1534306" இலிருந்து மீள்விக்கப்பட்டது