பக்கம்:பாற்கடல்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

லா. ச. ராமாமிருதம்


“இதோ பார் அம்மாப்பெண்ணே, தனிக்குடித்தனம் போறே! நீங்கள் இரண்டுபேரும் சிறிசுகள். உங்களுக்கு அவசரமேயில்லை. சட்டுச் சட்டுன்னு குழந்தைகளைப் பெத்துண்டு உடம்புதான் கெட்டுப்போகும். இங்கேயே இதுக்குள்ளேயே உனக்கு ரெண்டு குறைப்பிரசவமாயிடுத்து. இங்கெல்லாம் சொல்றா. ஹோட்டல்லே சாதம் மல்லிப்பூவா, பார்வையாயிருக்கணும்னு, வடிக்கிறபோது சுண்ணாம்பைக் கலக்கறானாம்….”

அப்பா ! ஹோட்டல்காரனை வாழ்த்தணும். அம்மாப்பெண்ணுக்கு அவனாலேதான் விடியப்போறது!

“சோனா சுருக்கப்போய்ச் சேர்ந்தாளோ, ஹாலாஸ்யம் உடம்பு பிழைச்சுது. ஏற்கெனவே மூல உபத்ரவக்காரன்.“

ஒஹோ ப்ளேட்டு இப்போ அப்பிடி வாசிக்கிறதா?

-“புருஷாளுக்கு அவா உடம்பைப் பற்றி நினைப்பே இருக்காது. உழைக்கிற கட்டை நீயாத்தான் பார்த்து வாரத்துக்கு ஒரு முறையேனும் எண்ணெய் தேச்சுக்கிறா னான்னு பார்த்துக்கணும்.“

சபாஷ் மன்னி! பெண்ணை அனுப்பும்போது, ஹாலாஸ்யத்தைப் பேச்சுக்குக்கூட எண்ணெய்க் குளியலில் சேர்க்காமல் அம்போவில் விட்டுவிட்டு, “சோனா! வாரம் தவறாமல் ரெண்டு முறை எண்ணெய் தேச்சுக்கோ! செளக்கியம் சேர்த்துக்கோ !”

இப்போ இப்படியாக்கும்!

திண்ணையில் இதே சமயத்தில் வேறுமாதிரி உபதேசம் நடக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/204&oldid=1534307" இலிருந்து மீள்விக்கப்பட்டது