பக்கம்:பாற்கடல்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

லா. ச. ராமாமிருதம்


கிடையாது. எல்லோருடனும் சேர்ந்து இருந்துவிட்டுத் தனியாக இருந்தால் எங்களுக்கே பாந்தமாயிருக்காது. அத்தங்கா - அம்மாஞ்சி கலியாணம் பண்ணிண்டு அதுவும் சிறுவயதிலிருந்தே சேர்ந்து வளர்ந்துவிட்டு அதிலே என்ன தேனிலவு கிடைக்கும்? ஐரோப்பியர்கள் கொண்டாடுவான்னு, நான் கேட்டதை, படிச்சதை, உங்களிடம் சொல்கிறேன். அதனுடைய நிலவரம் என்ன வென்று ஸ்திரமா எங்களுக்கு ஒண்ணும் தெரியாது.”

“பெங்களூரில் பத்து வருஷம் வாழ்ந்தோமே, எங்கள் பூரண சந்தோஷ நாட்களும் அங்கேதான். எங்கள் வாழ்க்கையின் பேரிடிகள் விழத் தொடங்கின இடமும் அதுதான்!” என்று அம்மா சொல்லியிருக்கிறாள்.

சந்தோஷம் என்றால் சினிமா, டிராமா, கூத்து அல்ல. 'டாக்கி' வர இன்னும் எத்தனையோ வருடங்கள் இருந்தன. திரையில் உருவங்கள் வெறும் வாயை மென்றுகொண்டிருக்கையில் வசனங்கள் திரையில் பூத்து மறையும். அதுவும் எப்பவோ ஆடிக்கொரு தடவை. அமாவாசையைச் சேர்த்துக்கொள்ளக்கூடாது. அமாவாசை மாதம் ஒரு முறை வருகிறது. தவிர அண்ணாவுக்கு அப்பா இருக்கிறாரே!

காலையில் ஸ்நானம், சமையல், ஸ்தோத்திரம் எல்லாம் முடிச்சுண்டு, பள்ளிக்கூடத்துக்கு, வேலைக்கனுப்பறவாளை அனுப்பிவிட்டு, நானும் சாப்பிட்டு - மத்தியானம் பக்கத்துக் கட்டில் ஒரு மாமி மணி கோக்கச் சொல்லிக் கொடுப்பாள். மணிகள் (beads) - கண்ணாடிக் குழல்கள் வகுப்பே நடத்தினாள்; பத்துப் பன்னிரண்டு மாமிகள் ஒண்ணு சேருவோம். மணிக்கார மாமி கட்டுலே நுழையறபோதே அவள் அங்கங்கே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/206&oldid=1534309" இலிருந்து மீள்விக்கப்பட்டது