பக்கம்:பாற்கடல்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

205


மைதானத்தில் நின்றபடி paradeயோ பார்க்கில் bandடயோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கையில் அங்கு வந்திருக்கும் ஐரோப்பியக் குடும்பங்களில் யாரேனும் ஒரு ஸ்திரீ, அம்மா இடுப்பிலிருந்து அம்மாவைக் கேட்காமலே குழந்தையை வாரிக்கொண்டதும், அம்மாவுக்கு ஒரே வெட்கமாகப் போய்விடுமாம்! அங்கிருந்து குழந்தை அவர்கள் கோஷ்டியில், ஆண் பெண் அடங்கலாகக் கைமாறிக்கொண்டே போய், அவர்களுடைய கொஞ்சலிலிருந்து ஒருவாறு மீண்டு அம்மா கைக்குத் திரும்பி வரும்போது, கூடவே பிஸ்கட் பாக்கெட், சாக்லெட் பெட்டி (பெட்டியில் - ஞாபகமிருக்கட்டும், விளையாட்டுச் சாமான்கள்)

தெரியவில்லையா இன்னும்? இத்தனையும் என் பிரதாபந்தான்.

ராமாமிருதத்தின் குழந்தைப் பருவத்தில் அவன் உடல் செழிப்பு, நிறம், கவர்ச்சி பற்றி லால்குடியிலும் சென்னையிலுங் கூடப் பலர் நினைவு கூட்டல் கேட்டிருக்கிறேன்.

“குழந்தைக்குச் சுத்திப் போடுடி!“

ஒரு முறை இரு முறை இப்படி நேர்ந்தால் திருஷ்டி கழிக்கலாம். இது காரணமாகப் பிறர் இடுப்புச் சவாரி குழந்தைக்குத் தினப்படி மாமூல் ஆகிவிட்டால், தினப்படிக்கு திருஷ்டி கழித்துக் குழந்தை மிளகாய்க் கமறலில் செத்துப்போக வேண்டியதுதான், லால்குடிக்குப் போகும்போது நிச்சயமாக இந்தச் சடங்கு நடைபெறும். பெங்ளுரில்..? எனக்கு எப்படித் தெரியும்? தெரிந்துதான் என்ன ஆக வேண்டும்? ஆனால் அம்மாவுக்குப் பொதுவாக இப்படியெல்லாம் பாராட்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/211&oldid=1534314" இலிருந்து மீள்விக்கப்பட்டது