பக்கம்:பாற்கடல்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

209


கிறேன். அந்தச் சோகத்தில் அந்த விவரங்கள் முழுக்க நினைவில் நிற்கவில்லை. நின்றவரை இங்கு விஸ்தரிக்கவும் எனக்கு மனம் இல்லை. விரசமான கோரத்தை விவரிப்பதில் புண்ணியம் என்ன? ஏதோ ஒரு சமயத்தில் அம்மாவே என்னைத் தனியே அழைத்துத் தன்னையோ அண்ணாவையோ அதுபற்றிக் கிளறிக் கிளறிக் கேட்க வேண்டாம் என்று கட்டளையிட்டு விட்டாள்.

ஊரிலிருந்து யாராவது வந்தார்களா ? வர அனுமதிக்கப்பட்டனரா ? தெரியாது.

பக்கத்திலிருந்தவர் இரக்கம் பார்த்த துணையா? உதவியா? தெரியாது.

இதற்கு இடுகாடா? சுடுகாடா ? தெரியாது.

எதுவோ அதனின்று திரும்பிய அம்மாவின் துக்கத்தைக் காட்டிலும் அண்ணாவுக்குக் கண்டுவிட்ட அதிர்ச்சிதான் சொல்லப் போதாதென்று அம்மா சொல்கிறாள். இதுபற்றி விலக்க முடியாதபடி எப்போதேனும் பேச்சு நேரிடும் போதெல்லாம் அண்ணாவுக்குக் கண் தளும்பும். “ராமாமிருதம், ஏமாந்து விட்டேண்டா!“ — அப்பாவுடன் பேச்சைத் தொடர வேண்டாமென எனக்கு ஜாடை காட்டுவாள்.

அண்ணாவுக்கு ஏதோ குற்ற உணர்வில் trauma. அண்ணா வீடு வீடாகப் படியேறி, “ஏ சுப்ரமணியா! சுப்ரமணியா !” என்று கூப்பிட ஆரம்பித்துவிட்டாராம்.

அம்மாவின் நிலை எப்படியிருக்கும் ! நானும் சிவப்ரகாசமும் குழந்தைகள்.

பகவானுக்கு அநாதி என்று ஒரு பெயர் உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/215&oldid=1534318" இலிருந்து மீள்விக்கப்பட்டது