பக்கம்:பாற்கடல்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210

லா. ச. ராமாமிருதம்


அநாதிக்குப் பெண்பால் அநாதையா? அல்ல, இது வேறா?

அனாத பந்தோ!

அடியே பெருந்திருவே, இப்படியெல்லாம் பண்ணாவிட்டால், உன்னை நாங்கள் மறந்துவிடுவோமா?

அண்ணாவை ஒருவாறு சமாதானப்படுத்தித் தெருவிலிருந்து வீட்டுக்குள் கொண்டுவந்து விட்டுவிட்டு எந்த டாக்டர் அகப்படுவான் என்று தேடிக் கண்டு பிடித்து அழைத்து வந்து அவர் அண்ணாவைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, “அதிர்ச்சிதான். வேறு கவலைக்கிடமாக எனக்கு ஏதும் படவில்லை. ஆனால் இந்தச் சூழ்நிலையிலிருந்து அவர் உடனே மாற வேண்டும். உடனே ஊருக்குப் போய்விடுங்கள்.”

ஆகையால் அன்றே இரவோடு இரவாய்...

ரயிலில், சுந்தரத்துக்கு ஜுரம் கண்டுவிட்டது.

அம்மாவின் விழிகள் திகிலில் சுழல்கின்றன. மாறி மாறித் தம்பியைப் பார்க்கிறாள்.

மழுக் காய்ச்சலில் பையன் நினைவிழந்து கிடக்கிறான்.

அண்ணா அவனைப் பார்க்கிறார். அடுத்து அம்மாவைப் பார்க்கிறார்.

நானும் சிவப்ரகாசமும் குழந்தைகள்.

“No no. no. no“

அம்மா, அழுத்தமாக, அண்ணாவின் கையைப் பிடிக்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/216&oldid=1534319" இலிருந்து மீள்விக்கப்பட்டது