பக்கம்:பாற்கடல்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212

லா. ச. ராமாமிருதம்


நடுவே படகு எம்மாத்திரம்? பம்பரமாய்ச் சுழல்கிறது, பந்தாடுகிறது. புயலென்றால் இப்படித்தான் இருக்க வேணுமா? அடி மகளே, அடி அசடே, பின் எப்படி? என் சினமேதான் நான். பாற்கடலை நீங்கள் மட்டும் கடைவதாக உங்கள் நினைப்பா? நோகாமல் அடி, ஓயாமல் அழுகிறேன் என்கிற உங்கள் கடையலில் அமுதம் காண்பதெப்போ? பார், என் கடையலைப் பார்! ஆனால் நான் கடைந்து, நீங்கள் காணப்போகும் அமுதத்தில் எனக்குப் பங்கு கிடையாது. ஏன், அதுதான் பாற்கடல் நியாயம். நான் அசுரன், பாம்பின் தலைப் பக்கம் பிடித்துக் கடைகிறேன். வாலைப் பிடித்துக் கொண்டிருப்பவர்களுக்குத் தலை ஒரு சில முறைகளேனும் தெரிய வேண்டாமா?

நான் மடிவதற்குள் இழைக்கும் சின்னாபின்னமே என் பழிவாங்கல், நான் மடிவேன், உயிர் பெறுவேன். மறுபடியும் வருவேன், போவேன். எதிர்பாராத சமயத்தவன் நான். இதுதான் புயல்; அதுதான் நான்.

வீசும் புயலில், ஓயாத மழையும், நொறுங்கும் இடியும், வானத்தின் வயிற்றைக் கிழிக்கும் மின்னலும், இருளின் வீக்கமும் அன்றி, இரவு எது? விடிவு எது? இருள் எது?

புயல் எப்போது கடந்தது? எந்தக் கரையைக் கடந்தது? அங்கு எத்தனை கிராமங்களை விழுங்கிற்று?

கடலின் சினப்பு தணிந்தபாடில்லை. வீங்கி, குமுறி, உள்ளுக்கே 'விண் விண்….'

நாசம் தன் கூத்தை இங்கு ஆடிவிட்டு அடுத்த இடம் தேடிப் போய்விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/218&oldid=1534320" இலிருந்து மீள்விக்கப்பட்டது