பக்கம்:பாற்கடல்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

215


உத்தியோகம் சாக்கில், எப்படியோ ஒதுங்கியே இருந்துவிட்டான். தாய் தகப்பனை இழந்தபின் சிறுசிலிருந்தே இவர்கள் என்னோடு ஒட்டிக்கொண்டு இருந்துவிட்டார்கள். விடிவு காணும் வேளையில், குழந்தைக் கைப்பண்டத்தைத் தெருவில் போகிறவன் பிடுங்கிண்ட மாதிரி, திடுதிப்புனு இருவரையும் தோத்துட்டு நிக்கறேன். இப்படிப் போகணும்னு இருந்தால், இதுகள் பிறப்பானேன்? பிறவியின் வீணோடு எனக்குச் சமாதானம் பண்ணிக்கொள்ள முடியவில்லை. இந்த ஆற்றாமையைக் கேட்பதற்கு ஆள் இல்லையே! தெய்வத்தைக்கூட என்னால் இனி அளவோடுதான் நம்ப முடியும். அது சர்வ வல்லமை உள்ளதல்ல. பல விஷயங்கள் அதன் வசத்தில் இல்லை. என்னவோ திருடனுக்கும் கன்னக்கோல் சார்த்த ஒரு மூலை, அதோடு சரி. தெய்வத்தின்மேல் பழி போடுவதில் அர்த்தமில்லை. நான் அறியாதவளாகவே இருந்து விட்டுப் போகிறேன்.”

தன்னை அறியாமலே அப்பவே, அம்மா வாழ்க்கைக் கோடுகளைப் பற்றி, ஒரு தத்துவ முடிவுக்கு வந்துவிட்டேன். எனக்கு வயது ஏற ஏற, அவளை ஒரு தோரணை சூழ்ந்துகொண்டிருப்பதாக உணர்கிறேன். ஆனால் அது தோரணையில்லை. விஷயங்களை எடை போட்டு ஒதுக்கிவிட்ட ஒரு விரக்தி. “ஆ, இது இவ்வளவு“ “ஓ, இது இவ்வளவுதானா?”

எதிர்த் தராசில் எடை கட்டியிருப்பது தம்பிகளின் சாவு - நல்லது பொல்லாது, எல்லாவற்றுக்கும் அதுவே தான் எடை. இது சுயபிரக்ஞையில் எல்லாருக்கும் வெளிப்படையாக நடக்கவில்லை. உள்ளுணர்வில் தோய்ந்து, விஷயங்களை நோக்கும் பாவனையில், நடை-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/221&oldid=1534322" இலிருந்து மீள்விக்கப்பட்டது