பக்கம்:பாற்கடல்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

223


ஸ்வாரஸ்யமான பயிற்சி, பகீரதப் பிரயத்தனம் பண்ணிப் பார்க்கிறேன். சுந்தரம், சுப்ரமண்யம் முகங்களை நினைவுபடுத்திக் கொள்ளவே முடியவில்லை. ஆனால் அவர்களுடன் கூடவே வளர்ந்த கார்த்திகேயச் சித்தப்பா, அப்பளாக்குடுமி, கழுத்துவரை பொத்தானிட்ட சொக்காய், இடுப்பில் ஒற்றை வேட்டியுடன் பளிச்சென்று நினைவில் தெளிகிறார். மூளையின் அபார சக்தி, அதேசமயம் அதன் கிறுக்குகளையும் என்றுமே அளவிட முடியாது போலும். Magic lantern side போலும் frameகள் எழுகின்றன. அவை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்த முடியவில்லை, விவஸ்தை தெரியவில்லை.

மாலை வேளை, கூடத்தில் எதிர்எதிராக இரண்டு வரிசைகள் மாமிகள், தனித்து நாலைந்து ஆண்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். வரிசைகளின் ஒரு முனையில் சுவரோரம் கிருஷ்ணன் படம் மாலையிட்டுக் கோலமிட்ட மனைமீது சுவர்மேல் சார்த்தியிருக்கிறது. எதிரே குத்துவிளக்கு எரிகிறது.

எனக்குப் பஞ்சகச்சம் உடுத்தி, அதன்மேல் பட்டுச் சவுக்கம் கட்டி, கிருஷ்ணன் கொண்டை கட்டி, நாமமிட்டு (கொழு கொழு கண்ணே!) மார்பில் சந்தனம், கழுத்தில் அம்மா சங்கிலி, காலில் சதங்கை, ஜாலரா தட்டிக்கொண்டு (சலங்கையும் ஜாலராவும் எனக்கென்றே வாங்கியவை) - 'கண்டவலே, மூச்சவலே’ என்று வாய்க்கு வந்ததை உளறிக்கொண்டு, சதங்கை ஒலிக்கக் குதிக்கிறேன். ஸங்கீத உபன்யாசம் கேட்டு வீட்டுக்குத் திரும்பியதன் விளைவு! அம்மா, பக்தி சிரத்தையுடன், எல்லோருக்கும் சுண்டல் கேஸரி விநியோகம் பண்ணிக்கொண்டிருக்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/229&oldid=1534331" இலிருந்து மீள்விக்கப்பட்டது