பக்கம்:பாற்கடல்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

227


அப்பா, என்ன நிறம்! காய்ந்த சந்தனம் போன்ற வெள்ளை, எங்களுக்குத் தங்கை வந்திருக்கிறாள், பானு.

ராமாமிருதம், சிவப்பிரகாசம், பானுமதி.

எலி வேட்டை இப்படித் தனித் தலைப்புக் கேட்கும் இந்த விஷயத்தின் நினைப்பில், அருவருப்பில் இப்பவும் உடல் கூசுகிறது. ஆனால் இதைத் தப்ப வழியில்லையே. என்ன செய்வேன்?

சமையலறை தாண்டிய படுக்கையறையில் எல்லோரும் படுத்துக் கொண்டிருக்கிறோம். வெடுக்கென்று விழித்துக்கொள்கிறேன். ஏதோ சத்தம்தான் என்னை எழுப்பி விட்டிருக்கிறது.

“விழுந்துடுத்து!” கார்த்திகேயன் அறை கூவுகிறான். (சித்தப்பா என்று ஒருநாளும் என் சித்தப்பாவை நான் அழைத்ததில்லை. அதுவும் அந்த வயதில் இருவருக்குமே மரியாதையைக் கடைப்பிடிக்க வயதில்லை)

சமையலறைக்குப் போய் எலிக் கூண்டுடன் திரும்புகிறான்.

கூண்டுக் கதவின் அடியிலிருந்து வால் நீண்டு தொங்குகிறது. அவன் காலைச் சுற்றிக்கொண்டு பூனையும் வருகிறது. கூண்டைக் கீழே வைக்கிறான். பூனை கூண்டைச் சுற்றிச் சுற்றி வருகிறது. அதனின்று ஏதோ தினுசான முனகல் சப்தங்கள் கிளம்புகின்றன.

'ஆ!' அண்ணா சுவர் மூலையில் சார்த்தியிருக்கும் தடியான கழியை எடுத்துக் கொள்கிறார். ஊர்கோலமாக, முதலில் கார்த்திகேயன், எலிக்கூண்டுடன், உடனே பூனை, அடுத்து அண்ணா அறையை விட்டு வெளியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/233&oldid=1534336" இலிருந்து மீள்விக்கப்பட்டது