பக்கம்:பாற்கடல்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228

லா. ச. ராமாமிருதம்


போகின்றனர். அறை வாசல் தாண்டியதும் அண்ணா ஜாக்கிரதையாகக் கதவை மூடுகிறார். எனக்கு பயமாயிருக்கிறது. துக்கமாயிருக்கிறது. அம்மாவைக் கட்டிக் கொள்கிறேன். அம்மா முகமும் ஏதோ தினுசில் மாறியிருக்கிறது. என்னை அணைத்துக்கொள்கிறாள். அவள் நாட்டம் மற்ற இரு குழந்தைகளையும் அணைத்துக் கொள்கிறது. சிவாவும் பானுவும் அயர்ந்து தூங்குகின்றனர்.

பின்னர் –

தாக்கல் மோக்கல் இல்லாமல், நினைவில் ஒரு படம் எழுகிறது. எல்லோருமாக ரெயிலில் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறோம். எங்களைச் சுற்றி - சரியாக உட்காரக்கூட இடமில்லை - நிறைய மூட்டை முடிச்சுகள். மூடிமேல் ஆணி அறைந்த ஜாதிக்காய்ப் பெட்டிகள்.

டிக்கெட் பரிசோதகர் check பண்ணிக்கொண்டிருக்கிறார். நான் உட்கார்ந்து கொண்டிருக்கும், கயிறு கட்டியிருக்கும் படுக்கையைக் காலில் உதைத்து,”இதனுள் என்ன?” என்று கேட்கிறார்.

”அம்மி!” - என்கிறேன். அண்ணா என்னை முறைத்துவிட்டு, இரண்டு படி அரிசி தலைகாணி உறையில் தைத்துப் போட்டிருக்கிறோம்.”

”இல்லை அம்மிதான்!” நான் ஆத்திரத்துடன் சாதிக்கிறேன். “நான்தான் பார்த்தேனே! என் அடியில் கெட்டியா இருக்கே!”

டிக்கெட் பரிசோதகர் சிரித்துக்கொண்டே, கேட்காதது மாதிரி எங்களைத் தாண்டிச் செல்கிறார். அவர் தலை மறைந்ததும் அண்ணா என் தலையில் அடிக்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/234&oldid=1534337" இலிருந்து மீள்விக்கப்பட்டது