பக்கம்:பாற்கடல்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236

லா. ச. ராமாமிருதம்


ஐதீகவாதி. பெருங்காயச் செப்பு, கஸ்தூரிப்பெட்டி, சந்தனக்கட்டை (தேயத் தேய மணம்) உன் மானம் என் மானம், என் கானம் எல்லாமே எனக்கு இதுதான் ஐதீகம்; பாரம்பரியம், சம்பிரதாயம்.

உலகமே செய்துகொண்டிருக்கும் தவத்தின் சேமிப்புதான் சம்பிரதாயம்.

ஐதீகம், சம்பிரதாயவாதி என்பதால் நான் கட்சிக்காரன் ஆகிவிடமாட்டேன். ஏனெனில் இந்த ஐதீகம், சம்பிரதாயம் என்பதே - யாவரும் ஒரு குலமே, எவ்வுயிரும் என்னுயிரே எனும் சமரஸத் தெளிவுக்கு மார்க்கந்தான். எதையும் அதனதன் காரண காரியத்துடன் அதற்குரிய அனுதாபத்துடன் புரிந்துகொண்டால், அது வந்து முடியும் கோட்பாடு - எம்மதமும் சம்மதமே.

இசைத்தட்டில் கிட்டப்பாவின் கிளிக் கண்ணி கேட்கிறோம். மாண்ட் - வெள்ளிக் கிண்கிணிகளின் அலறல், மூல மூர்க்கத்தின் வேதனை, நகூர்த்திரப் பொறிகள், இளமையின் பிரிவாற்றாமை, பீரங்கிகள் கோட்டையைத் தகர்ப்பது போல் நெஞ்சை உலுக்கல்.

அடுத்து காவடிச்சிந்தில் அல்ல; அதுபோன்ற ஒரு ராகத்தில் பட்டம்மாளின் கிளிக் கண்ணியைக் கேட்கிறேன். தடபுடலற்ற அடக்கம். ஆனால் ஏமாற்றல் அடக்கம். ஊறுகாய் ஊறி ஊறித் தேன் கசிவது போன்ற ஓர் இனித்த ஏக்கம். 'உள்ளேயே அரித்து அரித்து எலும்பை உருக்குகிறது; இனிப் பிழைக்கமாட்டேன். என் மார்பில் பாய்ந்துவிட்ட வேலோடு என்னை எரித்து விடுங்கள்’ என்று கேட்கிற மாதிரி இருக்கிறது.

எதனின்று எது மிகை?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/242&oldid=1533323" இலிருந்து மீள்விக்கப்பட்டது