பக்கம்:பாற்கடல்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

239


நெகிழ்ச்சிகளை, நான் தேர்ந்த தெளிவுகளை, கண்ட தரிசனங்களை வரலாற்றின் ஊடே இழைத்துச் சொல்லிக்கொண்டு போகிறேன். அநுபவங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அவற்றுடன் சேர்ந்த அவற்றின் காவியத் தன்மையும் கூடவே இழையோடி வருகிறது. கண்கள் கேட்கின்றன. செவிகள் பார்க்கின்றன. ஜன்மேதி ஜன்ம பூர்வாதி மணங்கள் ஏதேதோ 'கம் கம்' வீசுகின்றன. காயத்தை, காலத்தைத் தூக்குகின்றது. உடல் பறக்கிறது - பரபரக்கிறது - இந்த அற்புதம் நேரும்போது எழுத்தில் மாட்டிக்கொண்ட வரை அதன் சலனத்தோடு சொல்லிவிடல் வேண்டும். இல்லையேல் அந்த அனுபவச் சூடு ஆறிப்போய் ஃப்ரிட்ஜில் வைத்த பச்சைக் காய்கறி போல் ஒரு மாதிரியாகச் சிலிர்த்துக்கொண்டு, வெறும் உபதேசங்களாக, வறட்டுப் பாடமாக, அனுபந்தமாக அம்சம் குறைந்து போய்விடும். மருந்தையே சர்க்கரையாக டில்லி பாதுஷாக்களுக்குக் கொடுக்கத்தானே யுனானி வைத்திய முறை கண்டுபிடிக்கப்பட்டது.

”இதென்ன இந்த மனுஷன் புலன்களின் செயல்களையே மாறாட்டமாகச் சொல்கிறான். ஒஹோஹோ !” நெற்றிப்பொட்டைத் தட்டிக் கொள்கிறீர்களா ? அதுதானே இல்லை! அதுதானே அற்புதம்! பைத்தியம் தான் பைத்தியம் என்று ஒப்புக்கொள்ளுமா என்கிறீர்களா? அப்படியுந்தான் இருந்துவிட்டுப் போகட்டுமே, ஆண்டிக்கூத்து!

நந்தவனத்தில் ஒர் ஆண்டி
அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி—
கொண்டுவந்தான் ஒரு தோண்டி
அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டு
உடைத்தாண்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/245&oldid=1533335" இலிருந்து மீள்விக்கப்பட்டது