பக்கம்:பாற்கடல்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242

லா. ச. ராமாமிருதம்


அயல்நாட்டிலிருந்து வந்துபோனவர், இங்கேயே தங்கிப் போனவர், வேறு கிருத்திரியங்களால் திரும்ப முடியாமல் தவிக்கும் வெளவால் வாழ்க்கையினர்.

அங்கே விட்டு வந்த குடும்பத்தை மறந்தோ அல்லது மீண்டும் அத்துடன் சேர இயலாமலோ இங்கே ஒரு புதுச் சந்ததியை ஏற்படுத்துபவர்.

இப்படியிருந்து அப்படி ஆனவர், எப்படி எப்படியோ இருந்து எப்படியோ ஆனவர் எல்லாமே தத்துவந்தான். வணங்காமுடித் தத்துவம், ஏளனத் தத்துவம், ஆசாபங்கத் தத்துவம், மெழுகுவர்த்தியை இரு பக்கமும் கொளுத்தி எரியவிடும் தத்துவம், ஒட்டுண்ணித் தத்துவம், நாளை நமதே என்ற தத்துவம். நாளை நடப்பதை யாரறிவான்? ஏக் ப்ளேட் மட்டன் பிரியாணி, கோழி வறுவல் ஜல்தி லாவ் - தத்துவம்.

சொல்லிக்கொண்டே போகலாம். டிக்கெட் இல்லாத இந்தப் பிரயாணிகளின் வாழ்க்கையில் சம்பவங்களுக்குக் குறைச்சலா? என் வாழ்க்கையில் அதிசயங்கள் இவர்கள் கண்டதுபோல் இல்லை. நிச்சயமாக இல்லை.

ஆனால் –

இந்தப் பேனா முள் என்று ஒன்று இருக்கிறதே, பொல்லாத முள், விஷ முட்கள் கடிகள் அத்தனையைக் காட்டிலும் மாபெரும் சக்தி வாய்ந்தது. தைத்தது எப்போ எங்கே என்று தெரியாது. பேனா மன்னர்கள் எல்லாம் பேனா முள் தைத்தவர்கள் அல்ல. அது விதி யென்றே சொல்லலாம்.

தியானம் என்கிறோம். இறைவனே தியானத்தில் இருக்கிறான் என்கிறார்கள். தியானத்தில் என்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/248&oldid=1533338" இலிருந்து மீள்விக்கப்பட்டது