பக்கம்:பாற்கடல்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

243


தெரிகிறது? அல்ல, தெரியும்? ஏதோ ஒரு மகிழ்ச்சி யில்லாமலா, ஊன் துறந்து, ஊன் மறந்து, காலம் கடந்து, தன்னையே மறந்து...

பேனாமுள் தீட்டும் சொல் தரும் மர்மத் தத்துவத்தின் (mysticism) மகிழ்ச்சிதான் என்ன?

வியாபாரம், லாபம், புகழ் நோக்கில் எழுதினாலும் சரி, என் விதி எழுத்து எனப் பயின்றாலும் சரி.

எழுதும் வரையிலேனும் எழுத்தில் ஏதோ வசியம் இருக்கிறது.

முதலில், இந்தச் சேதன வாழ்க்கையில், எழுத்து மூலம் தூண்டப்படும் அசேதன லக்ஷயங்கள் இருக்கின்றனவே, அதுவே பெறும் பேறு இல்லையா?

லக்ஷியம் என்பது என்ன ? நாளை என்பதே லக்ஷியந்தான். எல்லா லக்ஷியங்களும் நாளை எனும் நம்பிக்கையுள் அடங்கிவிட்டன. அதனினும் பெரிய லக்ஷியம் ஏது?

"எனக்காக அல்ல; என் பேரன்மார் பழம் கடிக்க” என்று இன்று மாஞ்செடி நட்ட கிழவன் கதை சின்ன வயதில் கேட்ட கதை; இப்போதுதான் அதன் உண்மை புரிகிறது; புரிந்துகொண்டே இருக்கிறது.

"என்னால் இந்தப் பிறவியில் முடியாததை, என் பிள்ளைகள் மூலம், பேரன்மார்கள் மூலம், சந்ததி மூலம், வர்க்கத்தின் மூலம் சாதித்து, என் அரைகுறையை முழுமையாக்கிக் கொள்வேன்; இதற்காகவே என் வர்க்கத்தின் ஸ்திரத் தன்மையில், (evolution தத்துவப்படி திரும்பத் திரும்பப் பிறவிமூலம் கடையல்) அது அடைந்திருக்கும் தரம் மேலும் மேலும் உயர்தல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/249&oldid=1533339" இலிருந்து மீள்விக்கப்பட்டது