பக்கம்:பாற்கடல்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

249


என்று அழுதேன். 'குவா’ என்கிற சப்தத்தை அழுத நேரத்துக்குப் பக்கம் பக்கமாக நிரப்புவதா? அப்படி அழுகையில் குழந்தை பாலுக்கு அழுததா? அல்லது பிறவி எடுத்ததற்கா? 'எங்கே வந்திருக்கிறோம்?’ (குவா~ எங்கே) என்கிற பெரிய தத்துவார்த்தத்தில் ஜீவனின் அலறலா? யார் கண்டது?

அந்தந்த வயதுக்குக் கிடைத்த சுய நினைவு, அதிலும் கூடியவரை கிடைத்த நினைவு கூட்டும் சக்தி, அதையும் கூடியவரை அந்தந்தச் சமயத்தின் பார்வையோடு நோக்க முயற்சி, பிறர் சொல்லக் கேள்வி, இரண்டுக்கும் கிடைக்காததை இட்டு நிரப்பும் சொந்த அனுமானம், இத்துடன் பாஷையும் சேர்ந்த கலவையாகத்தான் என் இளமை - இளமை என்ன, எல்லா நினைவுகளையும் இந்தப் பக்கங்களில் பார்க்கிறீர்கள். இதில் மாட்டிக் கொண்ட உண்மைதான் கிடைத்தவரை, பிற எல்லாம் அந்த உண்மை சாய்க்கும் நிழல்கள் என்று சொல் லட்டுமா? நிழல்களும் பொய்யல்லவே!

முன் அத்தியாயங்களில் ஓரிடத்தில் சொல்லுகிறேன். தங்கள் கடும் சாவினால் குடும்பத்தையே கலக்கி விட்ட என் மாமாக்கள் சுந்தரம், சுப்ரமண்யன் முகங்களை நினைவு கூட்டப் பார்க்கிறேன். எவ்வளவோ முயன்றும் கிடைக்கவில்லை. கூடவே அதே வயதுக் கூறில் இருந்த என் சித்தப்பா கார்த்திகேயன், அப்பளாக் குடுமி, கழுத்துவரை Close Coat அந்த வயதின் அங்க, ஆடை அடையாளங்களுடன் நினைவில் ஸ்பஷ்டமாகப் பிதுங்குகிறார். மூளையின் கிறுக்கு இப்படி யெல்லாம் விளையாடுகையில் நினைவுகளை எப்படித் திட்டம் போட்டு நினைப்பது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/255&oldid=1533346" இலிருந்து மீள்விக்கப்பட்டது