பக்கம்:பாற்கடல்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

255


பட்டிருந்த விரிவுரையாளர்கள் - தயாரித்துக்கொண்டு வந்திருந்த ஆய்வுக் கட்டுரைகளைப் படித்தார்கள். சில சிலாகித்தன; பல கண்டித்தன. கடிக்க முயன்றன. ஒன்றிரண்டில் என் மண்டை உருண்டது.

ஆனால், எழுத்து அச்சில் பொதுச் சொத்தாகிவிட்ட பின், பூச்செண்டுகளுக்கும் அழுகல் முட்டை வீச்சுகளுக்கும் எழுத்தாளன் தயாராக இருக்கத்தான் வேணும். பதில் சொல்வது அவன் இஷ்டம். சொல்லாமல் இருந்தாலும் அவன் இஷ்டம். ஆனால் தடுக்க முடியாது.

இதழ்கள் என்கிற தலைப்பு வரிசையில், ஒரு கதை. கதாநாயகனின் முழு வாழ்க்கையும், அவனுடைய குழவி நிலை நினைவிலிருந்து சாவு வரை கதாநாயகனின் கண்ணோட்டத்திலேயே தன்னிலை ஒருமைப் பெயரில் (First Person Singular) பார்க்கப்படுகிறது.

ஆய்வாளர் கதையின் குரல் வளையைப் பிடித்த இடம்.

“ஆசிரியர், கதாநாயகனின் முதல் முதல் நினைவாக அவன் தாய்ப்பால் குடிப்பதை அவகாசமாகவே விஸ்தரிக்கிறார். அந்த அளவுக்கு முதல் நினைவு. அதுவும் சுய வெளியீட்டில் எப்படிச் சாத்தியமாகும்? இதைப் படிப்பவன் நம்பி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசிரியர், First person Singular முறையில் எதிர்பார்ப்பது நியாயமல்ல.”

இது அவர் பிராதின் அப்பட்ட பாஷை அல்ல; சாராம்சம். சற்று அநாவசியமான சூடாகத்தான் படிக்கும் குரல் இருந்தது என்பது என் அபிப்பிராயம்; ஆனால் அது அவரவர் உரிமை; மேடைப் பாணி.

கதையில் குறிப்பிட்ட பகுதியைக் கீழே தருகிறேன்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/261&oldid=1534342" இலிருந்து மீள்விக்கப்பட்டது