பக்கம்:பாற்கடல்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

261


கடை விரித்தேன்...

மீண்டும் சொல்கிறேன். கதை சொல்லும் வகைகளில் யதார்த்த முறையும் உண்டு; ஆனால் அதன் பெயரில் இழைக்கப்படும் தீம்புகளில், இலக்கியத்தில் சுகாதாரம், மென்மைகள், லக்ஷியங்கள், மானுடத்தின் மாண்பான உறவுகள், செளந்தர்யங்கள் கலைந்து, கசங்கி, ஏதோ ஒரு முறையில் அவை மேல் ஒரு தினுசான, அருவருப்பான மிருக ரோமம் படர்ந்து - என்ன, மீண்டும் ஜங்கிளா?

'Reality,' Truth (யதார்த்தம், உண்மை) இரண்டும் ஒன்றல்ல.

கர்ப்பத்தில் பரீக்ஷித்துக்கு விஷ்ணுவின் தரிசனம் கிட்டியதாக பாரதம் சொல்கிறது.

பிரஹலாதன் தாய்க்கு நாரதர் விஷ்ணுவின் பெருமைகளைச் சொல்லிக் கொண்டிருந்த போது கர்ப்பத்தில் பிரஹலாதன் 'ஊங்' கொட்டிக் கேட்டுக் கொண்டிருந்தானாம்.

நாம் பூர்வ ஜன்மத்தில் இந்து மதக் கோட்பாடுகளின்படி நம்பிக்கை உள்ளவர்கள். ஏழு மாத முகமல்ல, நெருப்பின் சாயங்களில் ஏழாயிர வருட முகங்களைக் கண்டேன் என்று கதையில் வருகையில், இந்தப் பின்னணியில் எதை யதார்த்தம், எதைச் சத்தியம், எதைக் கற்பனை என்பது? அனுமான தரிசனத்துக்கு, இந்த ஞானபூமியில், பகவான் ராமகிருஷ்ணர் அடைந்த நிர்விகல்ப சமாதியிலிருந்து, இலக்கியம் வரை இடம் உண்டு.

பட்டணத்து வாழ்க்கையில் எனது மிகமிக இளமை நினைவுகள் எவை?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/267&oldid=1534355" இலிருந்து மீள்விக்கப்பட்டது