பக்கம்:பாற்கடல்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

21


ஆனால் வேம்பு அர்ப்பணித்துக்கொண்ட பத்திரிகை ஆசிரியர். அதுவும் ஒரே பத்திரிகைக்கு அதிலும் ’அமுத சுரபி’க்கு என்பதை யாரும் நிரூபிக்கத் தேவையில்லை, வேம்பு உள்பட, அர்ப்பணித்துக்கொள்வதென்றால் என்ன என்று அவரைக் கண்டு அறிந்துகொள்ளலாம். இனிமேலும் என்னை நான் அர்ப்பணித்துக் கொள்ள மாட்டேன்.

வேம்புக்கு ’அமுதசுரபி’ இன்னும் குழந்தைதான், தனக்குப் பிறந்த குழந்தையைக் காட்டிலும் வளர்ப்புக் குழந்தைதான் அதிக பாசத்தை, கஷ்டத்தை வாங்கிக் கொள்கிறது. ஆனால் ’அமுதசுரபி’ நமக்கு, தன் முப்பத்து நாலாவது வயதில் தன் முழுமையை அடைந்து குடியும் குடித்தனமுமாய், கணவன் உள்பட எல்லாரையும் அட்டம் செலுத்தும் முழுமாதாகத்தான் காக்ஷி அளிக்க முடியும்.

என் குரல் இனி உர்த்தண்டமாய்த்தானிருக்கும். இன்னும் நான் புக்ககத்துக்கு வந்த புதுநாட்டுப்பெண் அல்ல. அந்த அடக்கமும் அமரிக்கையும் யாரும் என்னிடமும் இனி எதிர்பார்க்க முடியாது. பிறந்தகத்துக்கும் போகமாட்டேன்.

விசேஷங்களில் குத்துவிளக்கு ஏற்ற, வெற்றிலை பாக்கு முதல் நமஸ்காரம் வாங்கிக்கொள்ள, சுமங்கலிப் பிரார்த்தனை, சுபாஷிணி பூஜை இத்யாதிகளுக்கு எனக்குத் தகுதி வந்தாச்சு.

வேம்புவுக்கு நான் ஐஸ் வைப்பதாக நினைக்க வேண்டாம். நான் ஆயிரம் எதிர்பார்த்தாலும் அவர் நடத்துவதைத்தான் நடத்துவார் என்பது எனக்கு அனுபவ பூர்வம். பத்திரிகை உலகத்தின் தருமமே அப்படித்தான் போலும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/27&oldid=1532919" இலிருந்து மீள்விக்கப்பட்டது