பக்கம்:பாற்கடல்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

267


அதேபோல் பிற்பகல், பொட்டலங்கள் (பஜ்ஜி, பகோடா, தோசை) காபி ஸகிதம் வந்து சேரும். ஆனால் அதற்கு மட்டும் சில சமயங்களில், சமையலறைக் கதவு மூடிக்கொள்ளும். ஏமாந்து திரும்புவோம். அந்தத் தோசை விள்ளல் மேல் உருளைக் கிழங்கை வைத்துக் கிடைக்காதா என்கிற ஆசைதான்.

மனம் இல்லாமல் எழுந்து மாமி பதினோரு மணிக்கு சமையலைத் தொடங்குவாள்.

வீரராகவன் விழிகள் கண்முன் எழுகின்றன. சிமிழ் போன்று, பெரிய அழகிய, ரப்பை சுருண்ட இமைகளுடன் ஏதோ சோகம் ததும்பும் சாம்பல் விழிகள் Close upஇல், திரையை அடைத்து, அதனால் நெஞ்சை அடைக்கும் side pose Charles Boyer, கமலஹாஸன் கண்கள். அண்ணன் தம்பிகள் இருவருமே யாருடனும் தமக்குள்ளும் அதிகம் பேசிக் கொள்ள மாட்டார்கள். ஏதோ வருவார்கள், போவார்கள். ஊஞ்சலில் உட்கார்ந்து நடுவில் செல்லத்திலிருந்து வெற்றிலை போட்டுக்கொள்வார்கள். முறுக்கானும்தான். சிவபுரி வாசனைத் துண்டுப் புகையிலை அல்ல. பாலக்காட்டுச் சுருள் புகையிலை, நெடி ஊரைத் தூக்கும்.

நாங்கள், இன்னும் ஒன்றிரண்டு வீடுகள் தவிர ஆண்டித்தெரு பூரா ஆங்கிலோ இந்தியக் குடும்பங்கள் தாம்.

எங்கள் வீட்டுக்கு நேரே வசித்த குடும்பத்தில் புருஷன் மனைவி இரண்டே பேர்கள்தாம். அவளை எல்லோரும் அம்மி என்று அழைப்போம். அவள் இயற் பெயர் Amy என்று இப்போது தோன்றுகிறது. அம்மியாவது? ஆட்டுக்கல் மாதிரிதான் உடம்பு இடை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/273&oldid=1534361" இலிருந்து மீள்விக்கப்பட்டது