பக்கம்:பாற்கடல்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

269


Drainage, gas அடுப்பு, பேசும் படங்கள் இன்னும் வராத நாட்கள்.

ராயப்பேட்டை நெடுஞ்சாலையில், மவுண்ட் ரோடில், புரசைவாக்கம் நெடுஞ்சாலை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னையின் இதர பிரதம பாகங்களில் டிராம் ஒடிற்று.

“கண கணாங் - கணகணாங்..“ டிரைவரின் காலடியில் மணியோசை, இதோ நினைவில் எழுகிறது. இரவு வேளைகளில் மேலே மின்சாரக் கம்பியைத் தொட்டுக்கொண்டு போகையில் நீல மின்பொறிகள் பந்து பந்தாக, முடிச்சு முடிச்சாக 'விச்விச்' எனச் சத்தமிடும். ஒன்று திண்ணமாகக் கூற முடியும். என் குழந்தைகளும் உங்கள் குழந்தைகளும் ட்ராம் பார்த்ததில்லை. முக்கி முக்கி விரட்டினாலும் வேகம் பத்து, பன்னிரண்டு மைல்களுக்கு மேல் எட்டாது. நடுத்தெருவை அடைத்துக் கொண்டிருந்தாலும் டிராம் விபத்துக்களால், உயிர்ச் சேதங்கள், காயங்கள் கூட நேர்ந்ததாகத் தெரியவில்லை.

ஒரு கண்டக்டர் முகம், இன்னும் மறக்கவில்லை. அடர்ந்த புருவங்கள் அடியில் தணல் விழிகள். எடுப்பான நாசி. முக்கியமாக அந்த மீசை செழிப்பாக வளர்ந்து காதடியில் அதற்கென்றே இறங்கிய கிருதாவுடன் கலந்து ஒட்டிக்கொண்டது. கன grand. ராணா ரஞ்சித்சிங், ராணா ப்ரதாப்சிங் - சரித்திரப் புத்தகப் படங்களில் சந்திக்கும் முகம்போல் தோற்றத்தை ஜாக்கிரதையாகப் பயிர்செய்து கொண்டிருந்த போதில், அந்த ஆள் தமிழன்தான் என்று பின்னால் தெரியவந்தது.

டிராமை எடுத்தபின் பல டிரைவர்கள், கண்டக்டர் குடும்பங்கள் நசித்துப் போனதாகத்தான் ஞாபகம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/275&oldid=1534363" இலிருந்து மீள்விக்கப்பட்டது