பக்கம்:பாற்கடல்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

270

லா. ச. ராமாமிருதம்


அவர்களுக்கு வேறெந்தத் தொழிலும் தெரியாது. பஸ்ஸுக்கும் அவர்களால் மாற முடியாது! அந்த நெரிசலுக்கும், ஆபீஸ் நேரக் கெடுபிடிக்கும், அடாவடி நியாயங்களுக்கும், நிமிட நேரத்தில் மரியாதைகள் கசங்கிப் போவதற்கும், அவர்களால் ஒருநாளும் பழக்கமாக முடியாது. நிச்சயமாக அவர்கள் கௌரவமானவர்கள்.

எதிர்எதிராக இரண்டு டிராம்கள் கடக்கையில் ஒரு டிரைவரின் உதடு அசையும். எதிர்வண்டி டிரைவரின் புருவங்கள் உயரும்; ஏதோ சேதி பரிமாறப்பட்டுவிட்டது. எனக்கு அப்பவே தோன்றிற்று - டிரைவர்கள் மூலம் டிராம்களே பேசிக்கொண்டன.

”கனகனாங் கனகனாங் கணகணி கணாங்"”வழி விடப்பா, டிராமுக்குக்கூட அல்ல. மரியாதை மிகுந்த அந்த நாட்களுக்கு.

இரவு வேளையில், சில சமயங்களில் அங்கிருந்து மிஞ்சின குழம்பு, ரஸம் அம்மிக்குச் சீர் போகும். சொல்லி அனுப்பித்தால், நொட்டாங்கு அடிக்காமல் அவளே வந்து வாங்கிக் கொள்வாள் "ஆ! ப்ராமின்ஸ் குக்கிங்? நல்லா ஆச்சே! John likes especially your pepper water very much!” அம்மியைக் காட்டிலும் எங்களுக்குத்தான் மகிழ்ச்சி கூட. ஏனங்கள் திரும்பி வருகையில் ஒரு தரம்கூடக் காலியாக வரா. Plum cake, திராக்ஷைகள் ஏராளமாகப் பதித்த bun. Basra பேரீச்சம் பழம் (பார்த்திருக்கிறீர்களா? கர்ச்சூரிக்காய், வாதாம் கொட்டை, (பார்த்திருக்கிறீர்களா?) பச்சை வாழைப் பழம் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/276&oldid=1534364" இலிருந்து மீள்விக்கப்பட்டது