பக்கம்:பாற்கடல்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

273


அவன் சொல்லக் கேட்டு அண்ணா, பிறகு எப்பவோ, எனக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் வாக்கில் சொன்னது. ஓரிரண்டு இடையினங்கள்; அவற்றுடன் மெல்லினங்கள் மலிந்து, இழைக்கும் ஓசை நயங்களுடன் பின்னணியில் ஒற்றை ஸாரங்கியின் சோகத் தேம்பல், மூச்சின் கேவல் கேட்கவில்லை?

கேட்கும் செவியைப் பழக்கிக்கொள்ள - அல்லது, நான் பழக்கிக் கொண்டதற்கு ஓர் உதாரணம்.

பெரியோரைப் புகழ்வோம்.

அம்மியின் கணவனைக் குறிப்பிடுகிறேன்.

எனக்கு இரண்டாவது தம்பி ஆண்டித் தெருவில் பிறந்தான். ஹோட்டல்கார மாமி வாசல் பக்கத்து அறையை ஒழித்துக் கொடுத்தாள். (பின்னர் நாங்களே அதை எடுத்துக்கொண்டு விட்டோம்).

பிரசவம் (வழக்கம் போல்) வீட்டில்தான் நடந்தது. மன்னிப் பாட்டி, midwife உதவியுடன். ஆனால் என்ன கோளாறென்று தெரியவில்லை. முறைப்படி அம்மாவை ஸ்நானம் செய்வித்து வீட்டுக்குள் அழைத்துக் கொள்ளவில்லை. புண்ணியாவாசனம் நடக்கவில்லை. ஒரு ஜவ்வரிசிப் பாயசம்கூட வைக்கவில்லை.

திடீரென்று ஒருநாள் வாசலில் ஜட்கா வந்து நின்றது. அம்மாவை மன்னி தாங்கிக் கொண்டு வந்து ஏற்றித் தானும் ஏறிக்கொண்டாள். வண்டி பறந்தது. பின்னால் அண்ணா சைக்கிளில் கூடவே போனார். குழந்தையையும் கூடவே.

”சித்தி! அம்மாவை எங்கே அழைச்சுண்டு போறா ?”

”உஷ்... குழந்தைகளா, விளையாடப் போங்கோ.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/279&oldid=1534368" இலிருந்து மீள்விக்கப்பட்டது