பக்கம்:பாற்கடல்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

274

லா. ச. ராமாமிருதம்


அம்மா அப்போ போனவள்தான்.

மன்னி இரவு வீட்டில் படுக்கவில்லை. காலை ஒன்பது மணி வாக்கில் அவசரமாக வந்து, பல் விளக்குகிறாள்; காபி, ஸ்நானம். அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு, இரவுக்குத் தனக்கு எதையோ கட்டி எடுத்துக்கொண்டு போகிறாள். மறுபடியும் அவளைப் பார்க்க முடிவது மறுநாள் காலைதான்.

அண்ணா பள்ளிக்கூடம் போகிறார். சித்தப்பா ஆபீஸ் போகிறார்.

சித்தி சமைக்கிறாள். வீட்டுக் காரியம் பார்க்கிறாள். முடிந்தபோது முன்கட்டு மாமியுடன் கிசுகிசு. நான் அந்தப் பக்கம் வந்தால் பேச்சே அடங்கிவிடுகிறது.

சிவாவும் பானுவும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

நான்தான் இருப்புக் கொள்ளாமல் வீட்டுள் சுற்றிச் சுற்றி வருகிறேன். வெறிச்சோன்னு இருக்கு. காடுன்னா இப்படித்தான் இருக்குமா ? ஏதோ பயம்மா. அம்மா இங்கேயே எங்கேனும் ஓர் அறையில் ஒளிஞ்சுண்டு கண்ணாமூச்சி காட்றாளா? அம்பிப் பாப்பா? அக்கறை இல்லை. அம்மாதான் வேணும்.

”அண்ணா, அம்மா எப்போ வருவா ?”

”எல்லாம் வருவாள். போடா என்னைத் தொந்தரவு பண்ணாதே.”

இதென்ன தாத்தா - அதான் அப்பா - இல்லை, அதான் தாத்தா, முன்னே பின்னே தெரியாமே, திடீரென்று ஊரிலேருந்து வரா? அந்த ஆறடியும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/280&oldid=1534369" இலிருந்து மீள்விக்கப்பட்டது