பக்கம்:பாற்கடல்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

278

லா. ச. ராமாமிருதம்


பானை மேல் கரண்டியை அடித்தாற் போல் ‘கும்’ கொடுத்து அந்தக் 'கணீர்’ அலை பாய்ந்தது.

அம்மா போய்க் கட்டிலில் சாய்கிறாள். அவள் அருகில் கட்டிலில் சுண்டு விரலுக்குக் கையும் காலும் முளைத்தாற்போல் ஏதோ ஒண்ணு நெளியறது.

”அம்பிப் பாப்பாடா!”

வியப்புடன் பார்க்கிறேன். இது என் தம்பியாமே! விரலான்.

பாதி இரவில் திடுக்கென முழிச்சுக்கறேன். இல்லை, எனக்குத் தூக்கமே வரல்லியோ என்னவோ?

ஓசைப்படாமல் எழுந்து அடிமேல் அடி வெச்சு - கும்மிருட்டு, பயமாத்தானிருக்கு - ஆனாலும் முன் கட்டுக்குப் போறேன். கதவை மெதுவா திறக்கிறேன்.

விடிவிளக்கில் கட்டில்மேல் அம்மா தெரியறா. உட்கார்ந்துண்டு பாப்பாவுக்குப் பால் கொடுத்துண்டு இருக்கா என்னை அடையாளம் கண்டுண்டதும் அவள் விழிகள் நாவல் பழம் மாதிரிப் பளப்பள - ஒரே பேப்பர் மாதிரி வெளுத்திருக்கா. நான் உள்ளே வரக் காலை எடுத்து வைக்க முன்னிடுவதைக் கண்டதும் மறுக்கும் பாவனையில் தலையை பலமாக ஆட்டுகிறாள்.

”அம்மா, உன்னை நான் தொடணுமே!”

புன்னகை புரிகிறாள்.

”உன்னைத் தொடத்தான் தொடுவேன்!” என் முனகல் உயர்கிறது. தரைமேல் காலைப் பிடிவாதத்தில் உதைக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/284&oldid=1534377" இலிருந்து மீள்விக்கப்பட்டது