பக்கம்:பாற்கடல்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

280

லா. ச. ராமாமிருதம்


ஆறிப்போய், சளசளா, சொள சொளா - தாத்தா ஒரு பக்கம் மேடு கட்டிக் கொஞ்சம் கொஞ்சமாத் தள்ளித் தள்ளி மொத்தையடிக்கிறார். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அவர் வாய்க்கும் கைக்கும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

தாத்தா சப்பளம் மாற்றி ஒரு காலை மண்டியிட்டுக் கொள்கிறார். ஒரு கையைத் தரையில் ஊன்றிக் கொள்கிறார். துவையலுக்குப் பின் பொரித்த குழம்பு சாதம். அப்பறம் ரசஞ்சாதம். உள்ளே வேகிறேன். எங்களுக்குத் தொட்டுக்க மட்டும் பொரிச்ச குழம்பு. அப்பறம் நேரே மோருஞ் சாதம். தாத்தாவுக்கு மட்டும் இத்தனை சாதமோ? ரசஞ்சாதம் முடித்தபின் தாத்தா இலையை ஸ்பெஷலாக வழிக்கிறார்.

சித்தி ஒரு ஓரத்தில் சர்க்கரை வைக்கிறாள்.

“ஏய், பாலுஞ்சாதம் !”

தாத்தா தளரப் பிசைந்த அன்னத்தைத் தூக்கித் தூக்கி வாய்க்குள் எறிந்துகொள்கிறார். பூனைபோல் ஏதோ முனகல்கள் அவரிடமிருந்து வெளிப்படுகின்றன. அனுபவித்துச் சாப்பிடுகிறார். எனக்குத் தாங்க முடிய வில்லை. என் வாயிலிருந்து 'சொள்ளு' தரையில் சொட்டுகிறது. தாத்தா பார்த்துவிடுகிறார். அவருக்கு முகம் சுளிக்கிறது.

”ஹும்! இதுகளைத் தூங்கப் பண்ணப்படாதா எனக்குப் படைக்கு முன்?”

”எல்லாரும் தூங்கியாச்சு. இவன்தான் இப்படி!”

”கிட்ட வந்து தொலை!” இரண்டு கவளங்கள் அள்ளி, குருவிபோல் திறந்த என் வாயுள் எறிகிறார். அப்பா, என்ன ருசி! என்ன ருசி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/286&oldid=1534379" இலிருந்து மீள்விக்கப்பட்டது