பக்கம்:பாற்கடல்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

284

லா. ச. ராமாமிருதம்


சிரிக்கிறேன். எங்கோ சுட்டிக் காண்பிக்கிறேன். “அங்கே பாத்தியா, சாமி வரார் எருமை மாட்டு மேலே ”

“மன்னி இங்கே வாங்களேன்! குழந்தையைப் பாருங்களேன்!”

மன்னி என்னைத் தன் மடியில் கிடத்திக்கொள்கிறாள். ”என்னடி இவன் வாயோரம் கறுப்பாயிருக்கு?”

அம்மாவுக்குப் பளிச்சின்னு விஷயம் உதயமாகிறது. எழுந்து ஓடிப்போய் மருந்து பாட்டிலைக் கொண்டு வருகிறாள். அம்மாவின் விழிகள் வட்டம் சுழல்கின்றன. மன்னி முகத்துக்கெதிர், பாட்டிலைத் தூக்கிப் பிடிக்கிறாள்.

”என்னடி அம்மாப்பெண்ணே ?” பாட்டில் பாதிக்கு மேல் காலி.

”ஐயய்யோ! மருந்தில் கஞ்சா சேர்ந்திருக்குடி விஸ்வனாதன் செட்டி எழுதின ப்ரகாரம்!”

“பெருந்திருவே கருப்பண்ணா!”

வீடு அல்லோலப்படுகிறது. எனக்கு எல்லாம் அக்கரையில் தெரியறாப்போல இருக்கு.

அண்ணாவுக்குச் சொல்லி அனுப்பி, வருகிறார். தலையில் டர்பன்; கழுத்துவரை க்ளோஸ் கோட் ஒரு கையில் பஞ்சகச்சத்தின் கொடுக்கைப் பிடித்துக் கொண்டு நிற்கிறார்.

என்ன கம்பீரம் ! அண்ணாவுக்குக் கொஞ்சம் ஜவஹர்லால் நேரு ஜாடை உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/290&oldid=1534383" இலிருந்து மீள்விக்கப்பட்டது