பக்கம்:பாற்கடல்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

லா. ச. ராமாமிருதம்


நாங்களே லால்குடிக்கு எட்ட ஆகிவிட்டோம். என் குழந்தைகளைப் பற்றிக் கேட்பானேன்! அவர்களுக்கு லால்குடி எண்ணத்திலேயே எட்ட எட்ட. இருந்தும் இன்னும் முற்றும் இற்றுப்போகவில்லை. குலதெய்வத்துக்கு வேண்டுதலை, அபிஷேகம், நம்ம ஊர் என எப்போதேனும் நெஞ்சிலிருந்து எட்டிப் பார்க்கும் ஏக்கம் இருக்கிறதே! பரம்பரை வாசனை என்பது அதுதான்.

கீழ்த்தெருக்கோடியில் கடைசி இரண்டு வீடுகளுக்கு முன், வடக்கே பார்த்த வீடு, தமிழ்ப் பண்டிதர் ராமசாமி அய்யர் வீடு. இப்போ வீட்டின் முகப்பு மட்டும் மாறியிருக்கிறது. மாடி எழும்பியிருக்கிறது. மற்றபடி உள்ளே எல்லாம் அப்போ இருந்தபடிதான். அந்த இடத்துக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். இதோ வாசலில் ஜட்கா நின்றுவிட்டது. வாசலில் நின்று கொண்டு அம்முவாத்துக் குடும்பத்தை வேடிக்கை பார்க்க வேண்டாம்.

வாருங்கள். என்னோடு வாருங்கள். சரித்திரத்துள் நுழைவோம்.

நீண்ட திண்ணைக்கும் குட்டித்திண்ணைக்கும் மேலே ஓலைக்கூரை, வாசல் தாண்டியதும் ஒழுங்கையில் ஓர் அறை. அது சொல்லும் கதை தனி பின்னால் அதற்கு வருவோம். ரேழி தாண்டியதும் கூடம்.

சுவரில் பதித்த இரண்டு சந்தனக்கட்டைகள் மீது, சிறிய மணைப்பலகை அளவுக்கு ஒரு பழம் பலகை. ஊரிலிருந்து வந்த அனைவரும் அந்தப் பலகைக்கு விழுந்து நமஸ்கரிக்கிறோம். எப்போ ஊருக்கு வந்தாலும் எங்கள் முதல் வேலை அதுதான். இதுதான் அம்மன் பலகை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/30&oldid=1532922" இலிருந்து மீள்விக்கப்பட்டது