பக்கம்:பாற்கடல்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

294

லா. ச. ராமாமிருதம்


நாணயத்தை எடுத்து மாமாவிடம் நீட்டினேன். அவர் புருவங்கள் வினாவில் உயர்ந்தன.

“காபி, ரெண்டு கப் விலை.”

எங்களைச் சுற்றிக் 'கொல்’ என்று ஒரு சிரிப்பு விஷ்ணுசக்கரம் மாதிரிக் கிளம்பித்து பாருங்கள், லேசில் ஒஓயவில்லை. மாமிக்குப் புரைக்கேறி விட்டது. பெண்கள் அம்மா முதுகைத் தட்டி அவள் முதுகில் முகத்தைப் புதைத்துக்கொண்டு சிரிக்கிறார்கள். அவர்கூடச் சிரித்து விட்டார். இதைப் படித்துவிட்டு யாராவது சிரிக்கிறீர்களா? ஞாபகம் இருக்கட்டும். பின்னால்தான் காளிதாஸன் முன்னால் அவன் 'ராபணா'த்தான்.

மாமி அந்த அலிபாபா ‘டின்'னிலிருந்து எடுத்துக் கொடுத்துக் கொண்டே இருந்தாள். தட்டை, முறுக்கு, போளி, தேன்குழல் - வெட்கத்தை விட்டபிறகு நாங்களும் கொடுப்பதையெல்லாம் வாங்கி வயிற்றுக்குப் போட்டுக்கொண்டிருந்தோம்.

தெரிந்த தாய்மார்களைக் கேட்கிறேன். வெட்கம் கெட்டுப் போனால், இரைப்பை நீளுமா? அல்லது பக்கத்திலேயே ஒன்று புதிதாக முளைத்துக் கொள்ளுமா ?

வண்டி நின்ற அடுத்த ஸ்டேஷனில் மாமா, அவரிடம் நான் கொடுத்த நாலணாவுடன் சேர்த்துப் போட்டு ஒரு பெரிய பிஸ்கட் ரோல் வாங்கிக் கொடுத்தார். அதையும் நாங்கள் யாருக்கும் கொடுக்காமலேயே தீர்த்துக்கட்டினோம். அவர் அப்படி வாங்கிக் கொடுத்தது எங்களுக்கு தண்டனையா? பரிசா ? பாடமா? இன்றுவரை புதிர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/300&oldid=1534398" இலிருந்து மீள்விக்கப்பட்டது