பக்கம்:பாற்கடல்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

296

லா. ச. ராமாமிருதம்


இந்தச் சம்பவத்தில் இவ்வளவு சாவகாசமாகத் துளைந்திருக்கக் காரணம் அதில் இப்போது காணும் சிரிப்பை உங்களுடன் பங்கிட்டுக் கொள்வதற்கே, ஆனால், அடிப்படைக் காரணம், அதற்குப் பின் அந்தக் குடும்பத்தை நான் சந்திக்க நேரவே இல்லை. அப்படி ஏன் நேர வேணும்? அந்த மாமி என் கன்னங்களைத் தொட்டபோதும், எங்களுக்குத் திண்டி வழங்கின போதும், அவள் விரல் நுனிகளில் சொட்டிய அமுத தாரைகள் மறக்க முடியவில்லையே! இந்தச் சந்திப்பு, ரெயில் சந்திப்பு இப்படியே வீணாகிவிடணுமா? டில்லியில் ஒரு பெண்மணி எனக்காகக் கசப்பு நாரத்தங்காய் ஊறுகாய் தேடிக் கொண்டுவந்து பரிமாறின கதை இந்தப் பக்கங்களில் ஏற்கெனவே வெளியாகி இருக்கிறது. அந்தத் தாய் இப்போ எங்கு இருக்கிறாளோ? முதலில் இருக்கிறாளோ? இல்லையோ? இதுபோன்ற சந்திப்புகள் திடீரென முளைத்தபடியே திடீரென்று அற்றுப் போவானேன்?

தெருவில் நடந்துபோகிறோம். எத்தனை முகங்கள், ஜனநெருக்கடியால், எத்தனை உரசல்கள்.

“I am sorry.”

“Oh that is alright!”

“ஏன்யா, கண் தெரியல்லே?“

அல்லது வெறும் முறைப்பு.

அல்லது மனதை மயக்கம் கொள்ளும் புன்னகை.

எத்தனை உறவுகள் இப்படித் தனித்தனியாக உதிர்ந்த பூக்களாகி வீணாகிவிடுகின்றன.

சில மணங்கள் நெஞ்சில் ஆயுசுக்கும் இப்படி இனங்காணாது நிற்பதும் உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/302&oldid=1534414" இலிருந்து மீள்விக்கப்பட்டது