பக்கம்:பாற்கடல்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

297


”அடடடடா! என்ன மனிதாபிமானம்!”

“எழுத்தாளனோன்னோ ! தனியா இப்படித் தோணும்போல இருக்கு.”

”ஆசை அப்படிப் பொங்கினால் தெருவில் போறவா அத்தனைபேரையும் வீட்டுக்கு அழைச்சுண்டு வந்து சமாராதனை நடத்துவதுதானே! தினமும் வைக்கத்து அஷ்டமி! மூணு வருஷமாக் கேட்டுண்டிருக்கேன், தீபாவளிக்கு ஒரு நல்ல புடவைக்கு வழியைக் காணோம்!”

ஏளனத்துக்கும் ஆத்திரத்துக்கும் எங்குதான் குறைவு?

மூன்று நாட்களுக்கு முன் டாக்டரிடம் போகும் நிலைமை வந்துவிட்டது. ஜுரம், அது சாக்கில் ஏற்கெனவே மூன்றுநாள் பட்டினி. என் நட்டாமுட்டு வைத்தியத்துக்குக் கேட்கவில்லை. வைத்தியனுக்குக் கொடுக்க வேண்டிய தக்ஷணையைக் கொடுத்தாக வேண்டும் போலும்! பெண்கூடத் துணைக்கு வந்தாள் என்றாலும் உடம்பு பலஹினம்; நடுவில் மூன்று இடங்களில், ஒரு மரத்தடியில், ஒரு வீட்டு வாசற்படியில், ஒரு தெருவிளக்கு மேடையில் தங்கித் தங்கிக் களைப்புத் தேற்றிக்கொள்ளும்படி ஆகிவிட்டது.

இரண்டாவது கட்டத்தில் தெருவில் போகும் ஒரு ஸ்திரீ - முன்பின் அறியாதவள். தெரிந்தவள் போல் என்னைப் பார்த்துவிட்டு நின்றுவிட்டாள். ”என்னம்மா தாத்தாவுக்கு உடம்பு? பால் கொண்டுவந்து கொடுக்கட்டுமா? இங்கேதான் எனக்கு வீடு. சோடா வாங்கியாரட்டா ? கையைப் புடிச்சு அழைச்சுப் போ. பெரியவரே, என் மேலே தாங்கிக்கோங்க. பால் மாறாதீங்க. என் தகப்பனாருக்குச் செய்யமாட்டேனா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/303&oldid=1534415" இலிருந்து மீள்விக்கப்பட்டது