பக்கம்:பாற்கடல்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்பாற்கடல்

301


துரியோதனன் செய்தது நியாயமோ அநியாயமோ! கடைசிவரை வணங்காமுடி மன்னன். வைராக்கியமே ஒரு சத்தியந்தான். “சூதாட்டத்தில் தோற்றவன் வைத்த பணயத்துக்கேற்ப ஜெயித்தவனுக்குக் கட்டுப்பட வேண்டியவன்தானே! அவன் ஆட்டத்துக்கு அழைச்சான்னா தருமபுத்திரனுக்கு புத்தி எங்கேடா போச்சு ?” என்று எங்களைக் கோபிப்பார். அந்தக் கோபம் எங்களிடம் மாற்றப்படுவதை நாங்களே உணர்வோம்.

மனசுக்குத் தனியாகச் சிந்திக்கும் சக்தி உண்டு என்பதைச் சித்தப்பாவிடம்தான் உரிய அஸ்திவாரத்துடன் நான் உணர்ந்துகொண்டேன். நினைக்க ஒரு சக்தி கொடுத்தானே, அதுதான் ஆண்டவன் இழைத்த பெரிய தவறு. தனக்கு எதிர்ப்பு ஏற்படுத்திக் கொண்டது அதனால்தானே! தனித்த நினைப்புத்தான் Forbidden fruit ஆனால் அதைக் காட்டிலும் ருசியும் வேறு இல்லை. Satan ஒரு தத்தாரிப் பிள்ளை, அவ்வளவுதான் -அவன் என் சோதரன்; என் பிள்ளை, என் ரத்தம், என் குலந்தான். என்னால் என் ரத்தத்தை மறுக்க முடியாது.

கதை சொல்லப் பாட்டனார்.

பழையது போடப் பாட்டி.

இளம் வயதில் அவசியம் வேண்டும்.

லக்ஷியங்கள், வாழ்க்கையில் பிடிப்புகள், சோதனைகளைத் தாங்கப் பலங்கள், நம்பிக்கைகள், அன்பின் ருசிகள் இப்படித்தான் ரத்தத்திலேயே பெரியவர்களால் ஊட்டப்பட்டன.

ஆம்; அம்மா கைப் பழையதுகூடப் பாட்டி பிசைந்து போட்ட பழையதுக்குப் பின்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/307&oldid=1534419" இலிருந்து மீள்விக்கப்பட்டது