பக்கம்:பாற்கடல்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

310

லா. ச. ராமாமிருதம்


“எனக்கு மாங்கல்யப் பிச்சை போடுங்களேன்!” "என் கணவனுக்கு உயிர்ப் பிச்சை போடுங்களேன்!” அம்மா அலறியது இவ்வளவுதான்; மிச்சமெல்லாம் அந்த அலறலின் நாடிக் குபிரில் நெஞ்சில் நடுங்கும் எதிரொளிகள், எதிரொலிகள்.

அது மாடவீதி, ஒரு சாரியில் வீடுகள்; எதிர் சாரி கோயில் மதில். அதன் நடுவே ஓங்கி எழுந்த கோபுர சாட்சி. இதுவும் தானே எழும் தோற்றந்தான். சத்திய சாயைகள்.

அந்தக் கூக்குரல் கேட்டு உள்ளிருந்து பதறி ஓடிவந்த பெண்டிரின் குவிந்து நடுங்கும் கரங்களினின்று பாட்டியின் முன்றானையில், அக்ஷதையும், மஞ்சளும், குங்குமமும், காசும் பெய்கின்றன. அடையாளமாக ஒரு பத்து வீடு தாண்டி, தன் வீடு திரும்பி, முன்றானையில் சேர்ந்த பிச்சையைப் பாத்திரத்தில் கொட்டியதும், ஒரு தாலிக் குண்டும் சேர்ந்து விழுந்ததாம். எந்தப் புண்ணியவதியோ?

பாட்டி கதை முடிவு எப்படி? அம்மா சொல்லவில்லை; நானும் கேட்கவில்லை. தெரியவும்வேண்டாம். ஆனால் அந்தச் செயலில் அடங்கியிருக்கும் அல்லது அடக்கியிருக்கும் ஆணவ ஒடுக்கம், எம்மட்டுக்கு? உனக்கு அகமுடையான் - அவன்கூட இல்லை- தாலி அவசியம் தெரிகிறது? அந்த அளவுக்கு ஆத்ம பரீட்சை.

“எனக்கு மாங்கல்யப் பிச்சை போடுங்களேன்!” மும் மூர்த்திகளின் தேவிமார்களும் தங்களையறியாமலே தன் தன் கழுத்துச் சரடை நெருடிப் பார்த்துக் கொள்கிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் கணவன்மார் அமரர்கள். ஆயினும் ஏதோ புரியாத திகில் – ஆலய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/316&oldid=1534442" இலிருந்து மீள்விக்கப்பட்டது