பக்கம்:பாற்கடல்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

311


மணி அலறுகிறது; சாட்சி சொல்ல நீதிமன்றத்துக்கு அழைக்கிறது.

“அநியாயம் நேரவிருக்கிறது. உங்கள் பாத்திரத்துக்காகவே அது நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.” இதுதான் அதன் சேதி.

கடையலில், பாற்கடல் கொந்தளிக்கிறது. கடைவது அமுதத்துக்காக, அமுதம் அமரத்துவத்துக்காக.

உயிரின் இயல்பு, உள்ளுணர்வு, நோக்கம், லக்ஷியம் எல்லாமே அதுதான். நான் அழியக்கூடாது.

மத்துச் சூடேறி இமயத்தினின்று நெருப்புப் பொறிகள் பறக்கின்றன.

“எனக்கு மாங்கல்யப் பிச்சை போடுங்களேன்” இமயம் கூக்குரலிடுகிறது.

“இதென்ன திரும்பத் திரும்பத் திருப்பயாமி? பக்கம் ரொப்பியாமி ?”

அப்படித் தோன்றின் அப்படியே இருக்கட்டும். எங்கெங்கோ திரிந்து அயர்ந்து, பாலைவனச் சோலைக்கு வந்திருக்கிறேன். இரு உள்ளங்கைகளையும் கிண்ணம் சேர்த்து, உயிரின் சுனையினின்று இரண்டு மொள்ளு அள்ளிக் குடிக்கிறேனே! அப்படியே அந்தப் பால் மணலில் சாய்ந்து அண்ணாந்து, ஆகாயத்தில் கண் விட்டிருக்கும் அத்தனை நக்ஷத்திரங்களில் என் மூதாதையரைத் தேடி அடையாளம் கண்டு அவர்கள் ஆசியைப் புதுப்பித்துக் கொள்கிறேனே! அத்தனையும் உயிரின் ஊர்ஜிதந்தானே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/317&oldid=1534443" இலிருந்து மீள்விக்கப்பட்டது