பக்கம்:பாற்கடல்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

லா. ச. ராமாமிருதம்


போது குறைந்தது மணி பதினொன்றுக்கு மேலிருக்குமே ஒழிய, தாழ இல்லை.

கிழவரும் கிழவியும் கோயிலிலிருந்து திரும்பி வருகையில் திண்ணையிலும், தெருவிலும் கயிற்றுக் கட்டிலைப் போட்டுக்கொண்டு, அரட்டையடித்துக் கொண்டிருப்பவர்கள், அவர்கள் கடந்து செல்லும்வரை எழுந்து நிற்பார்களாம். அர்த்தஜாமம் பார்த்தவர்களைப் பார்த்த புண்ணியம். அந்த மோனக்காக்ஷி மனக் கண்ணில் எழுகையில் - Tableaux என்று சொல்வார்கள் - உடல் பூரா உள்ளே ஏதோ நீல லைட் அடிக்கிறது. விழியோரங்கள் குளுகுளுக்கின்றன.

ஐயாவைப் பற்றி அதிகம் பேசி நாங்கள் கேட்டதில்லை. ஆனால் பாட்டி –

பாட்டி ஒரு காட்டாள், வாட்டசாட்டமாய் ஸோல்ஜர் கோயிலிலும் ஆண் பிள்ளை போல் சாஷ்டாங்க நமஸ்காரம்தான் பண்ணுவாளாம். பூமியிலிருந்து பிடுங்கியெடுத்த கிழங்கு போன்று உக்கிர முகம். அந்த நாளில் அழகு பார்த்து, அழகு கேட்டுக் கலியாணம் பண்ணிக்கொள்ள முடியுமா? எல்லாம் உறவு விட்டுப்போகாமல் இருக்கப் பெரியவர்கள் பார்த்து முடித்து வைத்ததுதான்.

இரண்டு கைகளிலும் இரண்டு [1]விரைக்கோட்டை நெல்லை ஏந்திக்கொண்டு பரணில் கொட்ட, ஏணிமேல் ஏறுவாளாம். எழுத்து, படிப்பு வாசனை மருந்துக்குக் கூடக் கிடையாது. இத்தனையும் கேள்வித் தகவல். அவள் போட்டோ வீட்டில் இல்லை. அந்த நாளில்


  1. ஐந்து மரக்கால் அளவு.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/32&oldid=1533003" இலிருந்து மீள்விக்கப்பட்டது