பக்கம்:பாற்கடல்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

314

லா. ச. ராமாமிருதம்


தயவு பூசாரி கோபம் பொல்லாக் கோபம். பெந்துப் பாட்டியின் அணைப்புத்தான் கழுகு வட்டத்தினின்று குஞ்சைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.

அம்மா முகம் இப்போதெல்லாம் கொஞ்சம் இறுகியிருக்கிறதா? அண்ணா தன்னைப் பார்க்காத சமயத்தில் அவள் அண்ணாவைப் பார்க்கும்போது, அண்ணாவைப் பார்க்கவில்லை. அண்ணாவுக்குப் பின்னால் அவளுக்கு மட்டும் தெரியும் ஏதோ நிழலுருவத்தைப் பார்க்கிறாள். “வா உனக்காச்சு எனக்காச்சு”

“என்னம்மா பேசிக்கிறே?”

அம்மா என்னை மெளனமாகப் பார்க்கிறாள் யாரோ அந்நியனைப் பார்க்கிற மாதிரி.

புரியல்லே.

வீட்டு நடப்பிலேயே கார் மாதிரி ஏதோ gear மாறியிருக்கிறது. இதுபோல் புது வார்த்தைகள், நாங்களும் வாசல் திண்ணையில் உட்கார்ந்தபடியே, அர்த்தம் தெரிந்தோ தெரியாமலோ கற்றுக்கொள்ள ஆரம்பிச்சாச்சு.

என் குட்டித் தம்பி இப்போது விரலானாயில்லை. உரலானாகிவிட்டான்! இன்னும் ஆகிக்கொண்டிருக்கிறான். சிவந்து தளதளத்து, சுருட்டை மயிர், அழகிய பெரும் விழிகள், மூக்கு என் மாதிரியில்லாமல், கூரிட்டுக் கொண்டு வருகிறது. அவன் அண்ணா ஜாடை, இட்ட பெயர் வைத்யலிங்கம், இப்பத்தான் சிரமப்பட்ட நினைவுடன் புழக்கத்தில் கொண்டு வந்திருக்கிறது.

அம்மா பெருமாள் கோயிலுக்குக் கையில் எண்ணெய்க் குடுவையுடன் போய்க்கொண்டிருக்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/320&oldid=1534446" இலிருந்து மீள்விக்கப்பட்டது