பக்கம்:பாற்கடல்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

322

லா. ச. ராமாமிருதம்


கூட்டத்தில் மறைந்துவிட்டார். கார் ஸ்டார்ட் ஆகும் சத்தம் கேட்கிறது. Ford ஆ? Chevrolet ஆ? அப்பவும் என் கவலை ஏன் இப்படி ஓடுகிறது?

அன்று நான் வீட்டில், பெரிய ஹிரோ, எனக்குப் போட்டியில்லை. அப்போ M.G.R எங்கே சின்னப் பையனோ? ரஜினி இன்னும் பிறக்கவேயில்லை. அப்பாடி!

மன்னி, எனக்கு உதிரி விபூதி இட்டு, நடு முற்றத்தில் என்னை உட்காரவைத்துச் சுற்றிப் போட்டு - மன்னி நடு முற்றத்தில் எங்கோ ஒரு மூலையை முறைச்சுப் பார்த்துண்டு.

”கருப்பண்ணன் மேல் ஆணை - ஒடிப்போ - இங்கே விட்டு ஓடிப்போ!” யாரை அதட்டுகிறாள்?

”உனக்கு என்ன வேணும்” அன்று இரவு எனக்குச் சாப்பாட்டில் தனி மரியாதை எனக்கு என்ன வேணும்? பாலுஞ் சாதம்தான்.

”ஏலே, நீ செத்துப் போயிருந்தால், உன்னை எரிக்கிற வயசா? புதைக்கிற வயசா?” விரலான் அவர் கைகளிலிருந்து என்னைப் பார்த்துச் சிரிக்கிறான்.

”போறுண்டா சப்தரிஷி உன் வேடிக்கை!” மன்னி என்னை மூர்க்கமாக அணைத்துக் கொண்டாள். ”தவம் கிடந்து பெத்த குழந்தை. பெருந்திரு போட்ட பிச்சை அவளை உதாசீனமாய்ப் பேச எப்படிடா உனக்குத் தோணறது?”

மன்னி சீறி அன்றுதான் பார்த்தேன். முதல் தடவை, கடைசித் தடவை ரெண்டும் அதுதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/328&oldid=1534454" இலிருந்து மீள்விக்கப்பட்டது