பக்கம்:பாற்கடல்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

330

லா. ச. ராமாமிருதம்


பட்டமாகவும், சாயல்களாகவும், அடையாளமாகவும் என் கதைகளில் இழைந்திருப்பது, என் எழுத்துடன் பழக்கமான வாசகர்களுக்குப் புரிந்திருக்கும் என்றே நம்புகிறேன். எங்கெங்கு, என்னென்ன, எவ்வெவ்வாறு எனத் தனிப்பட்ட முறையில் நான் விளக்கப் போவ தில்லை, அனுபந்தமும் தரப்போவதில்லை. பொதுவாக அது கலைக்குக் குறைவு ஏற்படுத்துவதாகும். பாலாடைப் புகட்டல். எழுத்தாளன், வாசகன் இருவரையுமே அவமானப்படுத்துவதாகும். இலக்கிய அனுபவம் ஆளுக்கு ஆள் வேறு. அது வாசகனுடைய பிரயத்தனமாகவும் இருத்தல் வேண்டும்.

இலக்கிய அனுபவம் என்பதுதான் என்ன? இதைத் திட்டவட்டமான ஒரு சட்டத்துள் அடைக்க முடிந்ததாக எனக்குத் தோன்றவில்லை. எத்தனை வியாக்யானங்கள் செய்ய முடியுமோ அத்தனையையும் அது வாங்கிக்கொண்டு மேலும் இடம் காட்டும். இதில் பிரளயத்திற்குப் பின் ஆண்டவன் அதரங்கள் இளகும் புதிர்ப் புன்னகையின் ஒளியாட்டம் ஒளிந்துகொண்டிருக்கிறது என எனக்குத் தோன்றுகிறது.

சம்பவங்கள் நேர்கையில் அவைகளில் பூமியிலிருந்து பிடுங்கிய ஒரு கிழங்கு முரட்டுத்தனம், ஒரு கோரம் - ஏன், தரக்குறைவுகூடத் தெரியும். ஆனால் நினைவில் ஸ்புடமாகி அதன் வேளையில் எழுத்தாக வெளிப்படும் போது, நிகழ்ந்த நேரத்தின் மிரண்ட மூர்க்கம் கழன்று ஆனால் வலுக் குன்றாமல், ஒரு தெளிந்த குளுமை ஒளி தரும் சுடராக மாறுகின்றது. எழுத்துக்கே ரஸவாதம் உண்டு.

ஆனால் இதற்கு அடிப்படை உண்மைச் சம்பவம் தான். தி.ஜ.ர. சொல்வார்: “எந்தக் கதையேனும், அதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/336&oldid=1534522" இலிருந்து மீள்விக்கப்பட்டது